செய்திகள்

நடராஜன் இறுதிச் சடங்கில் பங்கேற்க சசிகலாவுக்கு 15 நாட்கள் பரோல்

Published On 2018-03-20 07:20 GMT   |   Update On 2018-03-20 07:36 GMT
நடராஜன் மறைவை அடுத்து இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக அவரது மனைவி சசிகலாவுக்கு 15 நாட்கள் பரோல் வழங்கி கர்நாடக சிறைத்துறை உத்தரவிட்டுள்ளது. #Sasikala #Natarajan
பெங்களூரு:

சொத்து குவிப்பு வழக்கு காரணமாக 4 ஆண்டுகள் தண்டனை பெற்ற ஜெயலலிதாவின் தோழி சசிகலா பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவரது கணவர் நடராஜனுக்கு கடந்த ஆண்டு உடல் நிலை குறைவு ஏற்பட்டபோது அவர் 5 நாட்கள் பரோல் பெற்று சென்னை வந்தார்.

இந்த நிலையில் இன்று காலை நடராஜன் மரணம் அடைந்ததால் சசிகலாவுக்கு பரோல் கேட்டு மனு செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறை தலைமை சூப்பிரண்டு சோமசேகரிடம் சசிகலாவுக்கு 15 நாட்கள் பரோல் கேட்டு மனு கொடுக்கப்பட்டது.

இந்த மனுவுடன் நடராஜனின் இறப்பு தொடர்பாக சென்னை குளோபல் மருத்துவமனை வழங்கிய சான்றிதழ்களும் இணைத்துக் கொடுக்கப்பட்டன.

மனுவை சசிகலாவிடம் கையெழுத்து பெற்று வக்கீல் அசோகன் சிறை தலைமை சூப்பிரண்டிடம் வழங்கினார். அந்த மனுவை பெற்றுக் கொண்ட தலைமை சூப்பிரண்டு, சிறைத்துறை டி.ஜி.பி.யுடன் கலந்து ஆலோசித்தார்.


அப்போது சசிகலாவுக்கு எத்தனை நாட்கள் பரோல் வழங்குவது என்பது பற்றி அவர்கள் ஆலோசித்தனர். இறுதியில் 10 நாட்களுக்கு மட்டும் சசிகலாவுக்கு பரோல் வழங்க முடிவு செய்யப்பட்டது. இந்த தகவல் காலை 9 மணி அளவில் சசிகலாவின் வக்கீலிடம் தெரிவிக்கப்பட்டது.

உடனே சசிகலா வக்கீல்கள் 10 நாட்கள் ‘பரோல்’ போதாது. 15 நாட்கள் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதுபற்றி சிறை அதிகாரிகள், கர்நாடகா மாநில சிறைத்துறை டி.ஜி.பி.யிடம் தெரிவித்தனர்.

15 நாட்கள் வரை ‘பரோல்’ கொடுக்க டி.ஜி.பி.க்கு அதிகாரம் உள்ளது. அந்த அதிகாரத்தை பயன்படுத்தி சசிகலாவுக்கு 15 நாட்கள் ‘பரோல்’ வழங்க டி.ஜி.பி. உத்தரவிட்டார்.

கடந்த முறை நடராஜன் சென்னையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றபோது 5 நாட்கள் பரோலில் அழைத்து சென்று திரும்ப வந்து பெங்களூரு சிறையில் ஒப்படைத்தது போல இந்த முறையும் சசிகலாவை அழைத்துச் சென்றுவிட்டு திரும்ப வந்து ஒப்படைப்பேன் என்று சசிகலா தரப்பில் அவரது உறவினரும் வக்கீலுமான அசோகன் சிறை சூப்பிரண்டிடம் உறுதி மொழி பத்திரம் தாக்கல் செய்தார்.

இதையடுத்து சசிகலாவை பெங்களூர் சிறையில் இருந்து தஞ்சைக்கு அழைத்து செல்வதற்கான ஏற்பாடுகளை அவரது உறவினர்களும், வக்கீல்களும் செய்தனர்.

இதையடுத்து சசிகலாவுக்கு பெங்களூர் சிறையில் மருத்துவ பரிசோதனை நடக்கிறது. அதன் பிறகு அவர் தஞ்சைக்கு காரில் புறப்படுகிறார். அவருடன் கர்நாடக மாநில அ.தி.மு.க. செயலாளர் புகழேந்தி, வக்கீல்கள் அசோகன், சுரேஷ் பாபு, பாலசுப்பிரமணி ஆகியோரும் தஞ்சை புறப்படுகின்றனர்..

இன்று இரவு அவர்கள் தஞ்சை வந்து சேருவார்கள் என்று தெரிகிறது. கடந்த முறை சசிகலா வந்தபோது அவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. ஆனால் இந்த தடவை வக்கீல் உறுதிமொழி அளித்து இருப்பதை ஏற்று சசிகலாவுடன் போலீசார் யாரையும் பெங்களூர் சிறைத்துறையினர் அனுப்பவில்லை. #Tamilnews
Tags:    

Similar News