செய்திகள்
திருடர்களை மொபட்டில் சென்று விரட்டிப்பிடித்த சவுமியா

தாலி செயினை பறித்து சென்ற திருடனை 4 கிலோ மீட்டர் துரத்தி பிடித்த இளம்பெண்

Published On 2018-02-22 05:22 GMT   |   Update On 2018-02-22 05:46 GMT
திருவனந்தபுரத்தில் தாலி செயினை பறித்து சென்ற திருடனை 4 கிலோ மீட்டர் துரத்தி பிடித்த இளம்பெண்ணுக்கு பொதுமக்கள், போலீசார் பாராட்டு தெரிவித்தனர்.
திருவனந்தபுரம்:

திருவனந்தபுரத்தை அடுத்த தாவளக்கரா பகுதியைச் சேர்ந்தவர் பாபு. இவரது மனைவி சவுமியா (வயது 28). இவர்களுக்கு 2 குழந்தைகளும் உள்ளனர். சவுமியா அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வருகிறார்.

தினமும் வேலைக்கு சென்று விட்டு மாலையில் தனது மொபட்டில் வீடு திரும்புவார். நேற்றும், இது போல மொபட்டில் வந்த போது, மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் சவுமியாவை வழிமறித்தனர். அவரது கழுத்தில் கிடந்த தாலி செயினை பறித்துக் கொண்டு ஓடினர்.

தாலி செயின் பறிக்கப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த சவுமியா வழிப்பறி திருடர்களை தனது மொபட்டில் விரட்டிச் சென்றார்.

சினிமாவில் வருவது போல் திருடர்கள் தப்பிச் செல்ல, அவர்களின் பின்னால் இளம்பெண் ஒருவர் விரட்டிச்செல்லும் காட்சி தாவளக்கரா சந்திப்பில் பரபரப்பை ஏற்படுத்தியது. சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் விரட்டிச் சென்ற பின்பு பொதுமக்கள் உதவியுடன் வழிப்பறி திருடர்களை சவுமியா மடக்கிப் பிடித்தார்.

அவர்களிடம் இருந்து தாலி செயினையும் மீட்டார். இதற்குள் போலீசாரும் அங்கு வந்து விட திருடர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். இதுபற்றி சவுமியா கூறும்போது, நகை திருடப்பட்டது என்பதை விட தாலியை பறித்து விட்டானே என்ற கோபம்தான் அவனை விரட்டிச் செல்ல வைத்தது என்றார்.

சவுமியாவுக்கு அப்பகுதி மக்களும், போலீசாரும் பாராட்டு தெரிவித்தனர்.



Tags:    

Similar News