செய்திகள்

திருவனந்தபுரம் அருகே காட்டுக்குள் துப்பாக்கியுடன் சுற்றிதிரிந்த 2 பேர் கைது

Published On 2018-02-20 08:50 GMT   |   Update On 2018-02-20 08:50 GMT
திருவனந்தபுரம் அருகே பாலோடு காட்டுப்பகுதியில் துப்பாக்கியுடன் சிற்றி திரிந்த 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த வெடிமருந்துகளை பறிமுதல் செய்தனர்.
திருவனந்தபுரம்:

கேரளாவில் வனப்பகுதிகளில் மாவோயிஸ்டு தீவிரவாதிகள் பதுங்கி இருந்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இவர்களை ஒடுக்க அதிரடிப்படை போலீசார் நியமிக்கப்பட்டு மாவோயிஸ்டுகளை வேட்டையாடி வருகிறார்கள்.

மேலும் கேரள காட்டுப் பகுதிகளில் வனவிலங்குகளை வேட்டையாடும் கும்பலும் அதிகரித்துள்ளது. வனவிலங்குகளை சட்டத்தை மீறி வேட்டையாடும் கும்பலை கண்காணித்து கைது செய்ய வனத்துறை அதிகாரிகளும் காட்டுப்பகுதியில் ரோந்து சுற்றி வருகிறார்கள்.

திருவனந்தபுரம் அருகே உள்ள பாலோடு அடர்ந்த வனப்பகுதியாகும். இங்கு யானைகள் உள்பட பலவிதமான வனவிலங்குகள் வசிப்பதால் அவற்றை திருட்டுத்தனமாக வேட்டையாடும் கும்பலும் இந்த பகுதியில் அடிக்கடி கைவரிசை காட்டி வருகிறது. பாலோடு வனத்துறை அதிகாரி ரெஜிஸ் தலைமையிலான வன ஊழியர்கள் பாலோடு பகுதியில் ரோந்து சென்ற போது காட்டில் 5 பேர் கொண்ட கும்பல் கையில் துப்பாக்கியுடன் அங்கு சுற்றித் திரிந்ததை பார்த்தனர்.

அவர்களை பிடிக்க வனத்துறையினர் முயன்றபோது 3 பேர் தங்களிடம் இருந்த துப்பாக்கிகளை காட்டி வனத்துறையினரை மிரட்டி விட்டு மோட்டார் சைக்கிள்களில் தப்பிச்சென்று விட்டனர். 2 பேர் மட்டும் வனத்துறையினரிடம் சிக்கினார்கள். அவர்களை கைது செய்து விசாரித்தபோது பாலோடு பகுதியை சேர்ந்த அனஸ் (வயது 29), மன்சிலின் ஷான் (30) என்பது தெரிய வந்தது.அவர்கள் அந்த பகுதியில் வனவிலங்குளை வேட்டையாட வந்த கும்பலை சேர்ந்தவர்கள். மிளா வேட்டையாட வந்த போது வனத்துறையினரிடம் சிக்கிக் கொண்டனர். அவர்களிடம் இருந்து 2 நாட்டு துப்பாக்கிகளும், வெடிமருந்துகளும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ஆயுதங்களுடன் தப்பியோடிய 3 பேர் கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள். #tamilnews
Tags:    

Similar News