செய்திகள்

ம.பி. தேர்தலுக்கு முன்பாக முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகானை மாற்ற பா.ஜ.க. திட்டம்

Published On 2018-01-21 08:06 GMT   |   Update On 2018-01-21 08:07 GMT
மத்தியப்பிரேதசம் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகானை மாற்ற பாரதிய ஜனதா மேலிடம் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. #ShivrajSinghChouhan #BJP
போபால்:

மத்தியபிரதேச மாநில அரசின் பதவி காலம் வருகிற மே மாதத்துடன் முடிவடைகிறது. எனவே, விரைவில் அங்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

பாரதிய ஜனதா இந்த மாநிலத்தில் தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியில் இருந்து வருகிறது. சிவராஜ்சிங் சவுகான் முதல்-மந்திரியாக இருக்கிறார். 4-வது முறையும் பாரதிய ஜனதா வெற்றி பெற கடுமையான முயற்சியில் இப்போதே இறங்கி இருக்கிறது.

இந்த நிலையில் அங்கு 19 நகராட்சிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. அதில், பாரதிய ஜனதா- காங்கிரஸ் கட்சிகள் தலா 9 இடங்களை கைப்பற்றி உள்ளது. ஒரு இடத்தை சுயேச்சை கைப்பற்றி உள்ளது.

கடந்த 2003-ம் ஆண்டில் இருந்தே அனைத்து தேர்தலிலும் பாரதிய ஜனதா அதிக இடங்களை பிடித்து வந்தது. ஆனால், இந்த தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு சமமான இடத்தை காங்கிரசும் கைப்பற்றி இருக்கிறது. விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் முன்னேறி வந்திருப்பது பாரதிய ஜனதாவுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

மேலும் முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான் மீது மக்களிடம் அதிருப்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது. பாரதிய ஜனதா கட்சியின் ஒரு பிரிவினரே அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளனர்.



உள்ளாட்சி தேர்தல் முடிவு பாரதிய ஜனதாவுக்கு பின்னடைவை கொடுத்து இருப்பதால் சட்டசபை தேர்தலையும் சிவராஜ்சிங் சவுகானை முன்வைத்து சந்தித்தால் வெற்றி பெற முடியாது என்று மேலிட தலைவர்களிடம் அவர்கள் கூறி உள்ளனர்.

எனவே, சிவராஜ்சிங் சவுகானை மாற்றி விட்டு வேறு நபரை முதல்-மந்திரியாக நியமிக்கலாமா? என்று பாரதிய ஜனதா மேலிடம் ஆலோசித்து வருகிறது.

மத்திய மந்திரி உமா பாரதி ஏற்கனவே மத்திய பிரதேசத்தில் முதல்- மந்திரியாக இருந்தவர். அவருக்கு அந்த மாநிலத்தில் தனி செல்வாக்கு உள்ளது.

எனவே, உமாபாரதியை முதல்-மந்திரி ஆக்கலாமா? என்று ஆலோசிக்கின்றனர். விரைவில் முதல்-மந்திரி மாற்றப்படுவார் என்று கட்சி வட்டாரங்கள் உறுதியாக கூறுகின்றன. #ShivrajSinghChouhan #BJP
Tags:    

Similar News