செய்திகள்

மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் புதிதாக 9 நகரங்கள்: தமிழகத்தில் ஈரோடு சேர்ப்பு

Published On 2018-01-19 11:04 GMT   |   Update On 2018-01-19 11:04 GMT
ஸ்மார்ட் சிட்டி நகரங்கள் பட்டியலில் புதிதாக 9 நகரங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஈரோடு இந்த பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.#smartcity #erode
புதுடெல்லி:

பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் முக்கிய இடம் பிடித்திருப்பது ‘ஸ்மார்ட் சிட்டி’ என்னும் சீர்மிகு நகர திட்டம் ஆகும். இந்த திட்டத்தின்கீழ் நாட்டில் 100 நகரங்களை தேர்ந்தெடுத்து, அந்த நகரங்களை சீனா, ஐரோப்பிய நாடுகளில் உள்ள ‘ஸ்மார்ட் சிட்டி’கள் போல அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி தந்து மேம்படுத்த வேண்டும் என்பதுதான் பிரதமர் மோடியின் லட்சியம் ஆகும்.

இந்த திட்டத்தில் முதல் கட்டமாக 20 நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அந்த பட்டியலை மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை கடந்த ஜனவரி 28–ம் தேதி வெளியிட்டது. அந்த பட்டியலில், தமிழ்நாட்டில் இருந்து சென்னையும், கோவையும் இடம்பெற்றன.

இந்த திட்டத்தில் சேர்த்துக் கொள்ளக்கூடிய நகரங்கள் தேர்வு தொடர்ந்து நடந்து வருகிறது. இதுவரை 3 தடவை நகரங்கள் தேர்வு நடந்துள்ளது. அதில் இந்தியா முழுவதும் 90 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டு இருந்தன.

இந்நிலையில், மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி நகரங்கள் பட்டியலில் புதிதாக 9 நகரங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த பட்டியலில் தமிழகத்தின் ஈரோடு இணைக்கப்பட்டுள்ளது. இதுவரை 99 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன என இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், மத்திய அரசு அறிவித்த ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் தமிழகத்தின் ஈரோடு நகரமும் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் புதிதாக 9 ஸ்மார்ட் சிட்டிகள் உருவாக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசின் ரூ. 500 கோடி செலவில் ஈரோட்டில் ஸ்மார்ட் சிட்டி உருவாகிறது என்றனர்.

ஏற்கனவே, தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்சி போன்ற நகரங்களும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. #smartcity #erode #tamilnews
Tags:    

Similar News