செய்திகள்

நடுவானில் சண்டை: 2 விமானிகள் நீக்கம் - ஜெட் ஏர்வேஸ் நடவடிக்கை

Published On 2018-01-10 07:21 GMT   |   Update On 2018-01-10 07:21 GMT
நடுவானில் பறந்த விமானத்தில் ஆண் விமானிக்கும், பெண் விமானிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து அவர்களை பணியில் இருந்து நீக்கி ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.#JetAirways
புதுடெல்லி:

கடந்த 1-ந்தேதி லண்டனில் இருந்து மும்பைக்கு ஜெட் ஏர்வேஸ் விமானம் வந்தது. விமானத்தில் 324 பேர் பயணம் செய்தனர்.

அந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டு இருந்தபோது விமானிகள் அறையில் இருந்த ஆண் விமானிக்கும், பெண் விமானிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு மோதல் உருவாகியது.

இதில் ஆவேசம் அடைந்த ஆண் விமானி பெண் விமானியின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். இதனால் அதிர்ச்சிக்குள்ளான அவர் விமானிகள் அறையில் இருந்து அழுது கொண்டே வெளியேறினார். அவரை சக ஊழியர்கள் சமாதானப்படுத்தி விமானிகள் அறைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த தகராறின்போது தானியங்கி செயல்பாட்டு அமைப்பில் விமானம் இயங்கி கொண்டிருந்தது. இதனால் விமானத்தின் பாதுகாப்புக்கே ஆபத்து ஏற்பட்டதாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக மத்திய விமான போக்குவரத்து இயக்குனரகம் விசாரணை நடத்தியது.

இதற்கிடையில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் 2 விமானிகளையும் பணியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளது. இதேபோல் விமானிகளின் லைசென்சை ரத்து செய்யும் பணியிலும் விமான போக்குவரத்து இயக்குனரகம் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளது. #tamilnews
Tags:    

Similar News