செய்திகள்

காஷ்மீரில் தீவிரவாதிகளை ஆதரிப்பதை நிறுத்தும்போது பாகிஸ்தானுடன் அமைதி பேச்சுவார்த்தை: ராணுவ தளபதி

Published On 2017-12-22 10:31 GMT   |   Update On 2017-12-22 10:31 GMT
ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகளை ஆதரிப்பதை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த முடியும் என இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
ஜெய்ப்பூர்:

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே தீவிரவாதம், எல்லை விவகாரம் ஆகிய பிரச்சனைகள் உள்ளன. கடந்த சில ஆண்டுகளாக இரு நாடுகள் இடையே அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை எதுவும் நடக்கவில்லை. பல்வேறு உச்சி மாநாடுகளில் இரு நாடுகளின் பிரதமர்கள் கலந்து கொண்டாலும், மேற்கண்ட விவகாரங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை எதுவும் நடக்கவில்லை.

இந்நிலையில், பாகிஸ்தான் பாராளுமன்ற செனட் சபையில் அந்நாட்டு ராணுவ தலைமை தளபதி ஜாவீத் பஜ்வா பிராந்திய பாதுகாப்பு குறித்து பேசினார். அப்போது, இந்தியாவுடனான பிரச்சனைகளை போருக்கு பதிலாக நாம் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கலாம் என்றும், இந்தியா உடன் பேச அரசு முடிவெடுத்தால் அதற்கு ஆதரவாக ராணுவம் நிற்கும் என்றும் தெரிவித்தார்.

‘தீவிரவாத குழுக்களுக்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற இந்தியாவின் கவலையை பாகிஸ்தான் புரிந்துகொள்ள வேண்டும். இந்தியாவுடனான நட்புறவை வளர்ப்பதில் அவர்கள் தீவிரமாக இருந்தால், எதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் தெரிவித்தார்.

இந்நிலையில், ராணுவ தளபதி பிபின் ராவன் இன்று ராஜஸ்தானின் பார்மர் அருகே உள்ள ராணுவ பயிற்சி பகுதியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறுகையில், “ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளிப்பதை பாகிஸ்தான் நிறுத்தினால் மட்டுமே அவர்களுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த முடியும்” என்றார்.

அதன் நடவடிக்கைகளைப் பார்க்கையில், உண்மையில் அமைதியை விரும்புவதாக தெரியவில்லை. தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளிப்பதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.



ஜம்மு காஷ்மீரில் ராணுவம், துணை ராணுவம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் காவல்துறை தீவிரவாதிகளுக்கு எதிராக வெற்றிகரமாக நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும், இந்த நடவடிக்கை தொடரும் என்றும் ராணுவ தளபதி தெரிவித்தார்.
Tags:    

Similar News