செய்திகள்
இலவச தரிசனத்தில் தேதி நேரம் குறிப்பிடப்பட்ட அட்டையுடன் சென்ற பக்தர்கள்.

திருப்பதி: இலவச தரிசனத்தில் டைம் ஸ்லாட் முறை தொடங்கியது

Published On 2017-12-18 05:19 GMT   |   Update On 2017-12-18 05:19 GMT
திருப்பதி ஏழுமலையானை வழிபட இலவச தரிசனத்தில் செல்லும் பக்தர்களுக்கு தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட தரிசன அனுமதி அட்டை வழங்கும் திட்டத்தில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
திருமலை:

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் இலவச தரிசன பக்தர்களுக்கு தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட தரிசன அனுமதி அட்டை வழங்கும் திட்டம் சோதனை முறையில் இன்று அமலுக்கு வந்தது. திருமலையில் பக்தர்களுக்கு தரிசன அனுமதி அட்டை வழங்குவதற்காக நந்தகம் தங்கும் விடுதி, திருமண மண்டபம் உள்பட 14 இடங்களில் 117 கவுண்ட்டர்கள் அமைக்கும் பணிகள் கடந்த 15 நாட்களாக நடந்து வந்தது.

தரிசன அனுமதி அட்டை வழங்கும் பணிக்காக 400 ஊழியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். ஊழியர்கள் 3 சிப்டாக 24 மணிநேரமும் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். அந்தக் கவுண்ட்டர்களில் கம்ப்யூட்டர்கள், பக்தர்களின் கைரேகையை பதிவு செய்யும் கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளது. இலவச தரிசனத்தில் ஏழுமலையானை வழிபட வரும் பக்தர்கள் தங்களின் ஆதார் அட்டையை கட்டாயம் கொண்டு வர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில் இலவச தரிசனத்தில் செல்லும் பக்தர்களுக்கு தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட தரிசன அனுமதி அட்டையை வழங்கி, அந்தத் திட்டத்தை திருமலை- திருப்பதி தேவஸ்தான அதிகாரி சீனிவாசராஜி தொடங்கி வைத்தார். இதில் சென்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

இந்தத் தரிசன அனுமதி அட்டை வழங்கும் திட்டம் வருகிற 23-ந் தேதி வரை தற்காலிக பரிசோதனை அடிப்படையில் தொடரும். இந்தத் திட்டம் வெற்றி பெற்றால் ஏப்ரல் மாதத்தில் இருந்து நிரந்தரமாக நடைமுறைக்கு வரும்.

திருமலையில் கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டு இருப்பது போல், திருப்பதியிலும் இலவச தரிசன பக்தர்களுக்கு தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட தரிசன அனுமதி அட்டை வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆதார் அட்டை கொண்டு வராத பக்தர்கள் வழக்கம் போல வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் வழியாக குடோன்களில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

அதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. பக்தர்களுக்கு தேவையான வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News