செய்திகள்

குஜராத், இமாசலப்பிரதேச தேர்தல்: நாளை ஓட்டு எண்ணிக்கை

Published On 2017-12-17 05:32 GMT   |   Update On 2017-12-17 05:44 GMT
குஜராத், இமாசல பிரதேச சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறுகிறது.
புதுடெல்லி:

முதல்-மந்திரி வீரபத்திர சிங் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வரும் இமாசல பிரதேச சட்டசபைக்கு கடந்த நவம்பர் 9-ந்தேதி ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடந்தது.

68 உறுப்பினர்கள் கொண்ட இமாசலபிரதேச சட்டசபையில் காங்கிரசின் பலம் 36 ஆகவும், பா.ஜனதாவின் பலம் 27 ஆகவும் உள்ளது. ஜனவரி 7-ந்தேதியுடன் இப்போதைய சட்டசபையின் பதவி காலம் முடிவடைவதால் தேர்தல் நடத்தப்பட்டது.

முதல்-மந்திரி வீரபத்திர சிங் மீது சி.பி.ஐ. சார்பில் நிலமோசடி உள்பட பல்வேறு ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வருகிறது.

தேர்தல் பிரசாரத்தில் ஆளும் காங்கிரசின் ஊழல்களை பா.ஜனதா முக்கிய பிரச்சினையாக கையில் எடுத்தது. ஊழல் இந்த மாநிலத்தில் காங்கிரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று கருதப்பட்டது.

கருத்து கணிப்புகளில் பா.ஜனதா ஆட்சியை பிடிக்கும் என்றும் பா.ஜனதாவுக்கு 43 முதல் 47 தொகுதிகள் வரை கிடைக்கும். காங்கிரசுக்கு 21 முதல் 25 தொகுதிகள் வரை மட்டுமே கிடைக்கும் என்றும் தகவல் வெளியானது.

இதேபோல் பல்வேறு நிறுவனங்கள் நடத்திய கருத்து கணிப்புகளிலும் பா.ஜனதா வெற்றிபெறும் என்றே கூறப்பட்டுள்ளது. மேலும் ஓட்டுப் பதிவுக்கு பின்பு நடந்த கருத்து கணிப்பும் பா.ஜனதாவுக்கு சாதகமாக உள்ளது.

182 உறுப்பினர்கள் கொண்ட குஜராத் சட்டசபைக்கு கடந்த 9-ந்தேதியும், 14-ந்தேதியும் 2 கட்டமாக ஓட்டுப்பதிவு நடந்தது. இங்கு 22 ஆண்டுகாலம் பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. மோடி தொடர்ந்து 3 முறை முதல்-மந்திரி பதவி வகித்துள்ளார்.



2014 பாராளுமன்ற தேர்தலின் போது மோடி முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்துவிட்டு பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றார். அவர் டெல்லி சென்ற பின்பு முதல் முறையாக குஜராத்தில் தேர்தல் நடைபெற்றது. பிரதமர் மோடி கவுரவப் பிரச்சினையாக எடுத்துக் கொண்டு குஜராத் தேர்தலில் கவனம் செலுத்தி பிரசாரம் செய்தார். அவருக்கு ஈடுகொடுத்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் பிரசாரத்தை கையில் எடுத்துச் சென்றார்.

குஜராத்திலும் பா.ஜனதா வெற்றிவாகை சூடி தொடர்ந்து ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும் என்று கருத்து கணிப்புகளில் தகவல் வெளியானது.

மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் பா.ஜனதாவுக்கு 110 முதல் 152 இடங்கள் வரை கிடைக்கும் என்றும், காங்கிரசுக்கு 26 முதல் 86 இடங்கள் வரை கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓட்டுப் பதிவுக்குப் பின்பு நடந்த கருத்து கணிப்புகளிலும் பா.ஜனதா வெற்றிபெற்று ஆட்சியை பிடிக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

குஜராத்திலும், இமாசல பிரதேசத்திலும் நாளை காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்குகிறது. தொடங்கிய சற்று நேரத்தில் முன்னணி நிலவரம் வெளியாகிறது.

குஜராத்தில் முதல்கட்ட தேர்தலில் 68 சதவீத ஓட்டுகளும், 2-வது கட்ட தேர்தலில் 68.7 சதவீத ஓட்டுகளும் பதிவானது. கடந்த 2012 தேர்தலில் 71.3 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. இந்த தேர்தலில் ஓட்டுப்பதிவு சதவீதம் குறைந்தது.

இமாசலபிரதேசத்தில் 74 சதவீத ஓட்டுகள் பதிவானது.
Tags:    

Similar News