செய்திகள்

காங்கிரஸ், பா.ஜ.க. அரசுகள் லோக்பால் சட்டத்தை பலவீனப்படுத்தி விட்டன: அன்னா ஹசாரே குற்றச்சாட்டு

Published On 2017-12-15 13:49 GMT   |   Update On 2017-12-15 13:49 GMT
மத்தியில் ஆளும் பா.ஜ.க. முன்னர் ஆண்ட காங்கிரஸ் ஆகிய இரு அரசுகளும் லோக்பால் சட்டத்தை பலவீனப்படுத்தி விட்டதாக காந்தியவாதியும், ஊழலுக்கு எதிரான போராளியுமான அன்னா ஹசாரே குற்றம்சாட்டியுள்ளார்.
கவுகாத்தி:

அசாம் மாநில தலைநகர் கவுகாத்தியில் இன்று செய்தியாளரகளுக்கு பேட்டியளித்த அன்னா ஹசாரே, மத்தியில் ஆளும் பா.ஜ.க. முன்னர் ஆண்ட காங்கிரஸ் ஆகிய இரு அரசுகளும் லோக்பால் சட்டத்தை பலவீனப்படுத்தி விட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட லோக்பால் சட்டத்தை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பலவீனமாக்கி விட்டார். 

அதே சட்டம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டபோது அரசு பணியாளர்களின் மனைவி, வாரிசுகள் ஆகியோர் ஆண்டுதோறும் சொத்து கணக்கை சமர்ப்பிக்க வேண்டியதில்லை என்ற சட்ட திருத்தத்தை திணித்ததன் வாயிலாக தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி லோக்பாலை மேலும் பலவீனப்படுத்தி விட்டார்.

விவசாயிகளைவிட தொழிலதிபர்களுக்குதான் பிரதமர் மோடி முன்னுரிமை அளிக்கிறார். ஜி.எஸ்.டி. வரி போன்ற விவகாரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் மத்திய அரசு 60 வயதை கடந்த விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்க முன்னுரிமை அளிக்க வேண்டும். 

ஊழலுக்கு எதிராக பலமான லோக்பால் சட்டத்தை வலியுறுத்தி வரும் மார்ச் மாதம் 23-ம் தேதியில் இருந்து எனது தலைமையிலான புதிய போராட்டம் தொடரும். ஊழலுக்கு எதிரான இந்த போராட்டத்தில் பங்கேற்பவர்கள் அனைவரும் எதிர்காலத்தில் நாங்கள் எந்த அரசியல் கட்சியிலும் சேர மாட்டோம். புதிய கட்சி எதையும் தொடங்க மாட்டோம் என்ற வாக்குறுதியை பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும். அதன் பிறகுதான் அவர்கள் போராட்டத்தில் பங்கேற்க அனுமதிப்படுவார்கள் என அன்னா ஹசாரே கூறியுள்ளார்.
Tags:    

Similar News