செய்திகள்

தமிழகத்துக்கு ரூ.2 ஆயிரம் கோடி சிறப்பு நிதியாக ஒதுக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தல்

Published On 2017-12-15 00:30 GMT   |   Update On 2017-12-15 00:31 GMT
14-வது நிதிக்குழு ஒதுக்கீட்டில் தமிழகத்துக்கு ரூ.2 ஆயிரம் கோடியை சிறப்பு நிதியாக தர வேண்டும் என்று நிதி மந்திரிகள் கூட்டத்தில் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தினார்.
புதுடெல்லி:

14-வது நிதிக்குழு ஒதுக்கீட்டில் தமிழகத்துக்கு ரூ.2 ஆயிரம் கோடியை சிறப்பு நிதியாக தர வேண்டும் என்று நிதி மந்திரிகள் கூட்டத்தில் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தினார்.

சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு தொடர்பான மாநில நிதி மந்திரிகளின் அதிகாரம் அளிக்கப்பட்ட குழு கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், நிதித்துறை துணை செயலாளர் மா.அரவிந்த் மற்றும் வணிக வரித்துறை இணை ஆணையர் சி.பழனி ஆகியோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் அமைச்சர் ஜெயக்குமார் பேசும்போது, ‘மதுபானங்கள், பெட்ரோல், டீசல் மற்றும் முத்திரைத் தீர்வை மூலம் ஈட்டப்படும் மாநில வரிவருவாய் குறித்தும், சமீபத்தில் அமைக்கப்பட்ட 15-வது நிதிக்குழுவில் மாநிலத்திற்கான நிதி ஒப்படைப்பு மற்றும் மானியம் ஆகியவற்றின் மீதும் ஆழ்ந்து விவாதிக்கப்பட வேண்டியுள்ளது. எனவே, அவற்றின் மீதான விவாதத்தை தற்போது ஒத்திவைக்க வேண்டும். பெட்ரோல், டீசல், முத்திரைத்தீர்வை மற்றும் மதுபானங்களை வரம்புக்குள் கொண்டுவரக்கூடாது’ என்று கூறினார்.

பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் அவர் கூறியதாவது:-

14-வது நிதிக்குழுவில் மாநிலத்துக்கான நிதி பங்கீடு செய்யும்போது தமிழகத்துக்கான ஒதுக்கீடு 4.969 சதவீதத்தில் இருந்து 4.023 சதவீதமாக குறைந்தது. இதனால் ஆண்டுக்கு கிட்டத்தட்ட ரூ.5 ஆயிரம் கோடி குறைந்தது. எனவே 14-வது நிதிக்குழு ஒதுக்கீட்டில் ரூ.2 ஆயிரம் கோடியை தமிழகத்துக்கு சிறப்பு நிதியாக தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்.

ஒகி புயலில் காணாமல்போன 297 படகுகள் மற்றும் 3,139 மீனவர்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளனர். நேற்று 33 மீனவர்கள் 3 படகுகளில் வந்துள்ளனர். தற்போது மாலத்தீவில் சில படகுகள் மீட்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதையெல்லாம் கழித்துப் பார்த்தால் மாயமானவர்கள் இன்னும் 40 படகுகளில் சுமார் 400 பேர் இருக்கலாம் என கருதப்படுகிறது.

மீனவர்கள் மிகவும் திறமையானவர்கள், எனவே பத்திரமாக கரை திரும்புவார்கள் என்று நம்புகிறோம். பேரிடர் பாதிப்பில் நிவாரணம் அளிக்கப்பட வேண்டிய மதிப்பை சரியாக கணக்கிட வேண்டும் என்பதால் மத்திய அரசிடம் நிவாரண நிதி கோருவது காலதாமதம் ஆகிறது.

ஜனநாயகத்தை நம்பியே நாங்கள் உள்ளோம். டி.டி.வி.தினகரன் பணநாயகத்தை நம்பி இருக்கலாம். அவர் குக்கர் அல்ல என்ன கொடுத்தாலும் டெபாசிட் வாங்க முடியாது. அவர் வெற்றி பெறுவார் என்பது கருத்துக்கணிப்பு அல்ல, கருத்து திணிப்பு.

இவ்வாறு அவர் கூறினார். 
Tags:    

Similar News