செய்திகள்

கேரளாவில் ‘ஒகி’ புயல் பலி எண்ணிக்கை 72 ஆக உயர்வு - 102 மீனவர்களை காணவில்லை

Published On 2017-12-14 21:34 GMT   |   Update On 2017-12-14 21:34 GMT
கேரள மாநிலத்தின் கடலோர மாவட்டங்களை சூறையாடிய ஒகி புயலின் கோரத் தாண்டவத்துக்கு பலியானோர் எண்ணிக்கை இன்று 72 ஆக உயர்ந்துள்ளது.
திருவனந்தபுரம்:

கேரளாவில் ஒகி புயலில் பலியானவர்களின் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 102 மீனவர்களை காணவில்லை.

கேரள கடற்கரை பகுதிகளில் கடந்த 30-ந்தேதி தாக்கிய ‘ஒகி’ புயல் பெரும் சேதங்களை விளைவித்தது. அங்கிருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற நூற்றுக்கணக்கான மீனவர்கள் புயலில் சிக்கி மாயமாகினர். அவர்களை தேடும் பணி ஒருபுறம் நடந்து வரும் நிலையில், பல மீனவர்களின் பிணம் தினந்தோறும் மீட்கப்படுவதால் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

பைபோர் கடற்கரையில் இருந்து 11 நாட்டிக்கல் மைல் தொலைவில் நேற்றும் 6 அழுகிய உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.

மீன்பிடிக்க சென்ற மீனவர்களால் மீட்கப்பட்ட இந்த உடல்களையும் சேர்த்து கேரளாவில் புயலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளது.

முன்னதாக கேரளாவின் பல்வேறு கடலோர பகுதிகளில் இருந்து நேற்று முன்தினம் 11 உடல்கள் மீட்கப்பட்டு இருந்தன.கேரளாவை சேர்ந்த 102 மீனவர்கள் இன்னும் கரை திரும்பவில்லை என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆனால் திருவனந்தபுரம் மாவட்டத்தில் மட்டுமே 98 பேர் மாயமாகி இருப்பதாகவும், இதனால் பலி எண்ணிக்கை 100-ஐ தாண்டும் என்றும் மீனவ மக்கள் கூறியுள்ளனர். 
Tags:    

Similar News