செய்திகள்

எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்க உச்சநீதிமன்றம் அனுமதி

Published On 2017-12-14 10:33 GMT   |   Update On 2017-12-14 10:33 GMT
எம்.பி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

புதுடெல்லி:

இந்தியா முழுவதும் சுமார் 1851 எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகள் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளன. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில் இந்த வழக்குகளை விரைவாக விசாரித்து தீர்ப்பளிக்க வழிவகை செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.  

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் இதுகுறித்து பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. அதற்கு பதிலளித்த மத்திய அரசு எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கலாம் என கூறியிருந்தது. 

இந்நிலையில், எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான புகார்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்க உச்சநீதிமன்றம் இன்று அனுமதி அளித்துள்ளது. அதன்படி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகள் அதிக அளவில் நிலுவையில் உள்ள தமிழகம், ஆந்திரா, பீகார், கர்நாடகா, மராட்டியம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு நீதிமன்றங்கள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை மட்டுமே விசாரித்து ஓராண்டுக்குள் தீர்ப்பு வழங்கும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க மாநில அரசுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கி பணியை தொடர வேண்டும் எனவும், மார்ச் 1-ம் தேதி முதல் இந்த சிறப்பு நீதிமன்றங்களை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags:    

Similar News