செய்திகள்

‘பிட்காயின்’ பரிமாற்றம் குறித்து வருமான வரி இலாகா அதிரடி சோதனை

Published On 2017-12-13 23:59 GMT   |   Update On 2017-12-13 23:59 GMT
‘பிட்காயின்’ பரிமாற்றம் குறித்து டெல்லி, பெங்களூரு, ஐதராபாத், கொச்சி, குர்கான் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் வருமான வரி அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
புதுடெல்லி:

வரி ஏய்ப்பு செய்வதற்காக உலகம் முழுவதும் ‘பிட்காயின்’ மூலம் ரகசியமாக பண பரிமாற்றம் செய்வது அதிகரித்து வருகிறது.

பிட்காயின் என்பது இணைய வழி பணம். இதை ஒருவர் இணையதள ‘வாலட்’டில் அமெரிக்க டாலர்களாகவோ, யூரோவாகவோ செலுத்தி வாங்க முடியும். ஒரு அமெரிக்க டாலர் யூக மதிப்பின் அடிப்படையில் ஒரு பிட்காயினின் இந்திய மதிப்பு தற்போது சுமார் ரூ.11 லட்சத்து 11 ஆயிரம் ஆகும்.

சமீபகாலமாக இந்தியாவில் பெரும் வர்த்தகர்கள், முதலீட்டாளர்கள், முக்கிய பிரமுகர்கள் பிட்காயினை அதிக அளவில் இணையதளம் வழியாக பரிமாற்றம் செய்து வருவதாக வருமான வரி இலாகாவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் டெல்லி, பெங்களூரு, ஐதராபாத், கொச்சி, குர்கான் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் வருமான வரி அதிகாரிகள் பெங்களூரு பிரிவு வருமான வரித்துறையின் உதவியுடன் நேற்று காலை அதிரடி சோதனை நடத்தினர். பணப்பரிமாற்றம் செய்து தரும் 9 நிறுவனங்களின் அலுவலகத்தில் இந்த சோதனை நடந்தது.

சந்தேகப்படும்படியான முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் யார் யாருக்கு பணப் பரிமாற்றம் செய்தனர், அவர்களது வங்கிக் கணக்குகளில் எந்த அளவிற்கு பணம் கையாளப்பட்டு உள்ளது என்பது போன்ற தகவல்களை சேகரிப்பதற்காக இந்த சோதனை நடத்தப்பட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 
Tags:    

Similar News