செய்திகள்

குஜராத் தேர்தலில் பாக். தலையீடு என்றால், நடவடிக்கை எங்கே?: மோடியை சாடும் சிவசேனா

Published On 2017-12-12 09:33 GMT   |   Update On 2017-12-12 09:33 GMT
குஜராத் தேர்தலில் பாகிஸ்தான் தலையீடு உண்மை என்றால் பிரதமராக இருந்து கொண்டு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று மோடியை, சிவசேனா கடுமையாக விமர்சித்துள்ளது.
மும்பை:

குஜராத் சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள பிரதமர் மோடி, தேர்தலில் பாகிஸ்தான் தலையீடு உள்ளதாகவும், பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளுடன் காங்கிரஸ் தலைவர்கள் ரகசிய கூட்டம் நடத்துவதாகவும் பரபரப்பு குற்றம் சாட்டியிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுத்த மன்மோகன் சிங், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை இப்படி கூறிவருவது பிரதமராக இருப்பவருக்கு அழகில்லை என்று கூறியிருந்தார், இந்நிலையில், மராட்டியத்தில் பா.ஜ.க உடன் கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் சிவசேனா கட்சி பிரதமரின் கருத்துக்கு கடும் விமர்சனத்தை அளித்துள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் நாளிதழான சாம்னாவில் கூறப்பட்டுள்ளதாவது, “குஜராத் தேர்தலில் பாகிஸ்தான் தலையிட்டுள்ளதாக பிரதமர் மோடி கூறுகிறார். பிரதமரின் கவலைகளை நாங்கள் புரிந்து கொள்கிறோம். ஆனால், அந்த குற்றச்சாட்டுகளுக்கு பிரதமர் மோடி ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை” என்று கூறியுள்ளது.

மேலும், “காஷ்மீரில் பாகிஸ்தான் வாலாட்டி வருகிறது. சிக்கிம், லே மற்றும் அருணாச்சல் பிரதேசம் மாநிலத்தில் சீனா தனது படைகளை குவித்து வருகிறது. ஆனால், இவற்றை எல்லாம் விட குஜராத் இப்போது முக்கியமாக மாறிவிட்டது. இந்து - முஸ்லீம்களை பிளவு படுத்தி வெற்றி பெற யாரும் முயற்சிக்கின்றனரா? என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News