செய்திகள்

ஆஸ்பத்திரிகளுக்கு செல்லாமல் மருந்து-மாத்திரைகள் மூலம் கருவை கலைக்கும் கர்ப்பிணிகள்

Published On 2017-12-12 06:56 GMT   |   Update On 2017-12-12 06:56 GMT
ஆஸ்பத்திரிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தபடியே மருந்து- மாத்திரை மூலம் 1 கோடியே 27 லட்சம் பேர் கருக்கலைப்பு செய்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
மும்பை:

இந்தியாவில் கர்ப்பிணிகள் குறித்தும், கருக்கலைப்பு குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

டெல்லியில் இயங்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு கவுன்சில் நியூயார்க்கை தலைமையிடமாக கொண்டு இயங்கும் கட்மாசர் நிறுவனம், கருக்கலைப்பு மாத்திரை நிறுவனம் மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து மேற்கண்ட ஆய்வை நடத்தியது.

2015-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி நாட்டில் 1 கோடியே 56 லட்சம் கர்ப்பிணி பெண்கள் கருக்கலைப்பு செய்வது தெரியவந்துள்ளது. அவர்களில் 22 லட்சம் பேர் மட்டுமே ஆஸ்பத்திரிக்கு சென்று கருக்கலைப்பு செய்துள்ளனர்.

அதே நேரத்தில் ஆஸ்பத்திரிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தபடியே மருந்து- மாத்திரை மூலம் 1 கோடியே 27 லட்சம் பேர் கருக்கலைப்பு செய்துள்ளனர். இது 81 சதவீதம் ஆகும். மேலும் 80 ஆயிரம் பேர் பாதுகாப்பு இல்லாத வகையில் நாட்டு மருத்துவம் மூலம் கருக்கலைப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மற்றவர்களுக்கு தெரியாத வகையில் கருக்கலைப்பு செய்வதையே பல கர்ப்பிணி பெண்கள் விரும்புகின்றனர். அதற்கென சக்தி வாய்ந்த மருந்து மாத்திரைகள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகின்றன. அது அவர்களுக்கு கை கொடுக்கிறது.

மும்பை, சென்னை போன்ற நகரங்களில் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு சென்று பலர் கருக்கலைப்பு செய்கின்றனர்.

இந்தியாவை பொறுத்த வரை கருத்தரிக்கும் 1000 பெண்களில் 47 பேர் கருக்கலைப்பு செய்கின்றனர். இது பாகிஸ்தானில் 50 ஆகவும், நேபாளத்தில் 42 ஆகவும், வங்காளதேசத்தில் 39 ஆகவும் உள்ளது.

இந்தியாவில் 6 மாநிலங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அதில் 4-ல் 3 மடங்கு கருக்கலைப்புகள் யாருக்கும் தெரியாமல் மருந்து மாத்திரைகள் மூலம் நடைபெறுவது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
Tags:    

Similar News