செய்திகள்

பெங்களூரில் இருந்து கேரளா வந்த ஆம்னிபஸ் ஆற்றில் கவிழ்ந்து 3 பயணிகள் பலி

Published On 2017-12-12 05:51 GMT   |   Update On 2017-12-12 05:51 GMT
பெங்களூரில் இருந்து கேரளா வந்த ஆம்னிபஸ் ஆற்றில் கவிழ்ந்து 3 பயணிகள் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொழிஞ்சாம்பாறை:

பெங்களூரில் இருந்து நேற்று இரவு கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் தலச்சேரிக்கு 45 பயணிகளுடன் ஆம்னி பஸ் புறப்பட்டது. இன்று அதிகாலை பஸ் தலச்சேரி பஸ் நிலையத்திற்கு வந்தது. அப்போது பெரும்பாலான பயணிகள் இறங்கி விட்டனர்.

டிரைவர் உள்பட பயணிகள் 8 பேர் இருந்தனர். மற்ற பயணிகளை இறக்கி விட பஸ் மீண்டும் புறப்பட்டது. பஸ் பெரிந்தாங்கல் மேம்பாலத்தில் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து இரும்பு தடுப்பு சுவற்றை இடித்துக்கொண்டு ஆற்றில் கவிழ்ந்தது. சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர். பின்னர் இது குறித்து தலச்சேரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆற்றில் இறங்கி தேடினர்.

அப்போது குத்துப்பரம்பை சேர்ந்த பிரிஜித், ஜிரேஷ், ஹேமலதா ஆகியோரை பிணமாக மீட்டனர். கதிரூரை சேர்ந்த பஸ் டிரைவர் தேவதாஸ் மற்றும் பெயர் உடனே தெரியாத 2 பேரை படுகாயத்துடன் மீட்டனர். 2 பேர் நீந்தி கரையேறினர். மீட்கப்பட்ட அனைவரும் தலச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இது குறித்து தகவல் கிடைத்ததும் தலச்சேரி போலீசாரும் சம்பவ இடத்திற்கு சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டனர். ஆற்றுக்குள் கிடக்கும் பஸ்சை பொக்லைன் எந்திரம் மூலம் மீட்கும் பணி நடைபெற்றது. 43 பயணிகள் இறங்கி விட்டதால் அதிர்ஷ்டவசமாக அவர்கள் உயிர் தப்பினர்.

இன்று அதிகாலையில் நடந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News