செய்திகள்

முதல் மந்திரி சித்தராமையாவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும்: அனந்தகுமார் பேச்சு

Published On 2017-12-11 05:47 GMT   |   Update On 2017-12-11 05:56 GMT
கர்நாடக முதல் மந்திரி சித்தராமையாவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்று மத்திய மந்திரி அனந்தகுமார் கூறியுள்ளார்.
பெங்களூரு:

பெங்களூரு புட்டென ஹள்ளியில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் மாற்றத்துக்கானப் பயண மாநாட்டில், மத்திய மந்திரி அனந்தகுமார் பேசியதாவது: -

கடந்த நான்கரை ஆண்டுகளாக கர்நாடகத்தை ஆட்சி செய்துவரும் முதல் மந்திரி சித்தராமையாவுக்கு தற்போது கனவு வந்து உள்ளது. அதனால் ’எனக் கொரு கனவு இருக்கிறது’ என்ற பிரசாரத்தை தொடங்கியிருக்கிறார். இதுவரை சித்தராமையா தூங்கிக் கொண்டிருந்ததால் அவருக்கு கனவு வந்து உள்ளது.

பெங்களூரு மேம்பாட்டுக்கான கனவோ, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் கனவோ, பெங்களூருவில் குற்றங்களை குறைக்கும் கனவோ சித்தராமையாவுக்கு இல்லை. மாறாக, சித்தராமையாவுக்கு பணம் சம்பாதிக்கும் கனவு உள்ளது. கர்நாடகத்தில் சட்டம்- ஒழுங்கு முழுமையாகச் சீர்குலைந்துள்ளது. இதை சரிசெய்ய இயலாத முதல் மந்திரியாக சித்தராமையா இருக்கிறார்.


கர்நாடகத்தில் குற்றச் செயல்கள் நாளுக்குநாள் பெருகிக் கொண்டே செல்கின்றன. இதற்கு முடிவு கட்ட, முதல் மந்திரி சித்தராமையாவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும். அப்போதுதான் கர்நாடகத்துக்கு விடிவுகாலம் பிறக்கும்.

அடுத்த சட்டப் பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அறுதிப் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கும். அப்போது, முதல் மந்திரியாக எடியூரப்பா பதவியேற்கப் போகிறார்.

இவ்வாறு மத்திய மந்திரி அனந்த்குமார் பேசினார்.
Tags:    

Similar News