செய்திகள்

குஜராத் முதல்வர் பதவிக்கு நான் ஆசைப்படவில்லை: அகமது படேல் மறுப்பு

Published On 2017-12-11 05:29 GMT   |   Update On 2017-12-11 05:29 GMT
குஜராத் முதல்- மந்திரி பதவியை விரும்புவதாக பாரதீய ஜனதா கட்சியினர் தவறான தகவலை பரப்புவதாக அகமது பட்டேல் மறுப்பு தெரிவித்துள்ளார்.
ஆமதாபாத்:

குஜராத் முதல்-மந்திரி வேட்பாளராக காங்கிரஸ் கட்சி சார்பில் யாரும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில் காங்கிரஸ் சார்பில் அகமதுபடேல் முதல்வராக்கப்படுவார் என்று சமீபத்தில் தகவல்கள் வெளியானது.

முதல் கட்ட தேர்தல் நடந்த சூரத் நகரில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் அகமதுபடேல் படத்துடன் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. அதில் ‘‘அகமது படேலை முதல்- மந்திரியாக்க முஸ்லிம்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்’’ என்று கூறப்பட்டு இருந்தது.

உடனே அகமது படேல் அதற்கு மறுப்பு தெரிவித்தார். இது பா.ஜ.க.வின் திட்டமிட்ட சதி என்று கூறினார்.



இந்த நிலையில் பிரதமர் மோடி குஜராத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசும் போது, ‘‘அகமது படேலை முதல்-அமைச்சர் ஆக்க வேண்டும் என்பதற்காக பாகிஸ்தான் தூதர் சதி செய்தார்’’ என்று பேசினார். இதற்கும் அகமது படேல் மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-

நான் குஜராத் முதல்- மந்திரி பதவியை விரும்புவதாக பாரதீய ஜனதா கட்சியினர் தவறான தகவலை பரப்புகிறார்கள். எனக்கு அத்தகைய ஆசை எதுவும் இல்லை. எதிர் காலத்திலும் அந்த ஆசை வராது.

ஆனால் பா.ஜ.க.வினர் தான் திட்டமிட்டு இந்த தகவலை பரப்புகிறார்கள். இதில் துளி அளவும் உண்மை இல்லை.


இவ்வாறு அகமது படேல் கூறினார். இவர் கடந்த 17 ஆண்டுகளாக சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News