செய்திகள்

குரங்குகளிடம் கொஞ்சி குலாவும் குட்டிப் பையன்

Published On 2017-11-30 01:31 GMT   |   Update On 2017-11-30 01:31 GMT
வானர கூட்டங்களைக் கண்டு சிறிதும் அஞ்சாமல் அவற்றுடன் பயமின்றி விளையாடுவதுடன், அவற்றுக்கு தினமும் உணவளித்து வரும் குட்டிப் பையனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
பெங்களூரு:

வானர கூட்டங்களைக் கண்டு சிறிதும் அஞ்சாமல் அவற்றுடன் பயமின்றி விளையாடுவதுடன், அவற்றுக்கு தினமும் உணவளித்து வரும் குட்டிப் பையனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

கர்நாடக மாநிலம் ஹூப்ளியை சேர்ந்த ஒன்றரை வயது சிறுவனுக்கு குரங்குகள் என்றால் கொள்ளை பிரியம். இவன் வசிக்கும் பகுதியில் குரங்குகள் அதிக எண்ணிக்கையில் வந்து செல்கின்றன.



தினமும் காலை 6 மணிக்கு அந்த பகுதியை சேர்ந்தவர்கள் குரங்குகளுடன் விளையாடும் குட்டி பையனை பார்க்கத் தவறுவதில்லை.

காலையில் தூக்கத்தில் இருந்தாலும், குரங்குகள் அந்த குட்டி பையனின் வீட்டு கதவை தட்டி அவனை எழுப்பி விடுகின்றன. அதன்பின்னர், குட்டி பையன் குரங்குகளுடன் சிறிது ஓடி ஆடி விளையாடுவான். சிறிது நேரத்துக்கு பிறகு, குரங்குகளுக்கு காலை உணவளிப்பதை தனது அன்றாட வழக்கமாக கொண்டுள்ளான்.

குட்டி பையனுடன் விளையாட்டு மற்றும் காலை உணவை முடிக்கும் குரங்குகள் அதன்பின் அமைதியாக அங்கிருந்து சென்று விடுகின்றன. சிறுவனை எந்த தொந்தரவும் செய்வதில்லை.



இதுகுறித்த வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் உள்ளூர் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

இதுதொடர்பாக அந்த குட்டி பையனின் பெற்றோர் கூறுகையில், குரங்குகள் அனைத்தும் காலை 6 மணிக்கு வந்து எங்கள் வீட்டுக் கதவை தட்டுகின்றன. அதைத்தொடர்ந்து, எங்கள் பையன் வைக்கும் உணவினை சாப்பிட்டு செல்கின்றன. அவனுடன் சேர்ந்து விளையாடி வருகின்றன். இதுநாள் வரை ஒரு நாள் கூட அந்த குட்டி பையனை கடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது என தெரிவித்துள்ளனர்.

குரங்குகளை கண்டு பயப்படும் வயதில், அவற்றுடன் விளையாடுவதுடன், உணவளித்து மகிழும் குட்டிப் பையனுக்கு ஏராளமானோர் தங்களது பாராட்டுதல்களை தெரிவித்து வருகின்றனர்.
Tags:    

Similar News