செய்திகள்

உயிர் காக்கும் 51 மருந்துகளின் விலை குறைகிறது

Published On 2017-11-24 21:52 GMT   |   Update On 2017-11-24 21:52 GMT
புற்றுநோய், இதய கோளாறு உள்ளிட்ட நோய்களுக்கான உயிர் காக்கும் 51 மருந்துகளின் விலை குறைகிறது.
புதுடெல்லி:

தேசிய அளவில் மருந்து பொருட்களின் விலையை ஒழுங்குபடுத்த தேசிய மருந்து பொருட்கள் விலை நிர்ணய ஆணையம் என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. அந்த அமைப்பின் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.

அதில், உயிர் காக்கும் 36 மருந்துகளின் அதிகபட்ச விலையை குறைத்து நிர்ணயிக்கப்பட்டது. அதுபோல், உயிர் காக்கும் 15 மருந்துகளின் விலை உச்சவரம்பு குறைக்கப்பட்டது.

இதனால், இந்த மருந்துகளின் விலை 6 சதவீதம் முதல் 53 சதவீதம் வரை என்ற அளவுக்கு குறையும் என்று தேசிய மருந்து பொருட்கள் விலை நிர்ணய ஆணைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த சதவீதத்துக்கு மேல் மருந்துகளை விற்கும் நிறுவனங்கள், உடனடியாக மருந்துகளின் விலையை குறைக்க வேண்டி இருக்கும் என்றும் அவர் கூறினார்.

விலை குறையும் மருந்துகளில் இதய கோளாறுகள், புற்றுநோய், கல்லீரல் அழற்சி உள்பட உயிருக்கு ஆபத்தான நோய்களுக்கு அளிக்கப்படும் மருந்துகள் அடங்கும்.

உதாரணமாக, மாரடைப்பு, பக்கவாதம் போன்றவற்றுக்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படும் ஊசி மருந்து பவுடரின் விலை, 28 சதவீதம் குறைய உள்ளது. புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ஊசி மருந்தின் விலை 48 சதவீதம் குறைகிறது.
Tags:    

Similar News