செய்திகள்
சபரிமலையில் குவிந்த அய்யப்ப பக்தர்கள்.

சபரிமலைக்கு ஆண் வேடத்தில் வந்த சிறுமி தடுத்து நிறுத்தம்

Published On 2017-11-22 05:08 GMT   |   Update On 2017-11-22 05:08 GMT
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் இருந்து சபரிமலைக்கு பக்தர்கள் குழுவுடன் ஆண் வேடத்தில் வந்த 15 வயது சிறுமியை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
திருவனந்தபுரம்:

சபரிமலையில் தற்போது மண்டல பூஜை நடந்து வருகிறது. இதனால் அய்யப்ப பக்தர்கள் குவிந்து உள்ளனர். பக்தர்கள் வருகை அதிகமாக இருப்பதால் அங்கு போலீஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

சபரிமலையில் 10 வயது முதல் 50 வயதிற்கு உட்பட்ட பெண்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுவது இல்லை. இதனால் சபரிமலைக்கு தடையை மீறி பெண்கள் வராமல் இருக்க போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனாலும் பாதுகாப்பை மீறி பெண் பக்தர்கள் சபரிமலைக்கு செல்லும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. சமீபத்தில் ஒரு பெண் பக்தர் சபரிமலைக்கு வந்தபோது கண்டு பிடிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டார்.

இந்த நிலையில் ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் இருந்து சபரிமலைக்கு வந்த பக்தர்கள் குழுவுடன் ஆண் வேடத்தில் 15 வயது சிறுமி ஒருவரும் வந்தது தெரியவந்தது. அவரது தலையை மொட்டை அடித்து தொப்பி அணிவித்து, கருப்பு பேண்ட், முழுக்கை டீசர்ட் அணிவித்து அழைத்து வந்திருந்தனர். ஆனாலும் பெண் போலீசார் அந்த சிறுமியை கண்டுபிடித்து தடுத்து நிறுத்தினார்கள்.

அவரை போலீஸ் பாதுகாப்பில் வைத்துக் கொண்டு மற்ற பக்தர்களை சபரிமலைக்கு அனுமதித்தனர். அவர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு வந்தபிறகு அந்த சிறுமி அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்.
Tags:    

Similar News