செய்திகள்

விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் ஏ.ஆர் ரஹ்மானிடம் உள்ளது: ஈரான் இயக்குநர் புகழாரம்

Published On 2017-11-21 14:49 GMT   |   Update On 2017-11-21 14:49 GMT
விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானிடம் உள்ளதால் அவர் இந்த உயரத்திற்கு வந்துள்ளதாக பிரபல ஈரானிய திரைப்பட இயக்குநர் மஜித் மஜிதி குறிப்பிட்டுள்ளார்.
கோவா:

கோவா தலைநகர் பனாஜியில் மத்திய அரசின் சார்பில் 48-வது சர்வதேச திரைப்பட விழா நேற்று தொடங்கியது. சுமார் 200 படங்கள் இந்த விழாவில் திரையிடப்பட உள்ளது. இந்த விழாவில் பிரபல ஈரானிய திரைப்பட இயக்குநர் மஜித் மஜிதி, ஏ.ஆர் ரஹ்மான் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர்.

விழா நிகழ்வில் ஊடகங்களிடம் பேசிய மஜித் மஜிதி ரஹ்மானின் திறமையை வெகுவாக புகழ்ந்தார். “ ரஹ்மான் சிறப்பான மனிதர். அவர் மிகவும் திறமைசாலியாக இருப்பதால் தான் இந்த உயரத்தை அடைந்துள்ளார். அவரிடம் உள்ள நெகிழ்வுத்தண்மை மிகவும் நல்ல குணாதிசயமாகும். ரஹ்மான் மீதான விமர்சனத்தை அவர் ஏற்றுக்கொள்வது அரிதான ஒன்று. விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் அவரிடம் உள்ளது.” என அவர் பேசினார்.

மேலும், “ஒரே ஒரு பிரச்சனை என்னவென்றால், ரஹ்மான் இரவு முழுவதும் விழித்திருந்து வேலை செய்யக்கூடியவர். அது மிகவும் சவாலானது. நான் தூங்கச்செல்லும் போது, அவர் என்னிடம் இசையை கேட்க சொல்வார். அவர் எதை விரும்புகிறாரோ அதை செய்து முடிப்பார். அது ஒரு அற்புதமான ஒத்துழைப்பாக இருக்கும். அவர் எனக்காக எடுத்த முயற்சிகளுக்காக நான் நன்றி கூறிக்கொள்கிறேன்.” என மஜித் மஜிதி தெரிவித்தார்.

கடந்த 2015-ம் ஆண்டு மஜித் இயக்கத்தில் வெளியான ‘முகம்மது: மெசேஞ்சர் ஆஃப் காட்’ என்ற படத்தில் ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார். தற்போது, ‘பேயாண்ட் தி கிளவுட்ஸ்’ (மேகங்களுக்கு அப்பால்) என்ற படத்தில் இருவரும் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News