செய்திகள்

நிதிஷ் குமார் அணிக்கு ‘அம்பு’ சின்னம் ஒதுக்கியதற்கு எதிராக ஐகோர்ட்டில் சரத்யாதவ் மனு

Published On 2017-11-21 10:18 GMT   |   Update On 2017-11-21 10:18 GMT
ஐக்கிய ஜனதா தளம் கட்சி இரண்டு அணியாக உடைந்த நிலையில் சின்னம் நிதிஷ் குமார் தரப்புக்கு வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சரத்யாதவ் அணியினர் டெல்லி ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
புதுடெல்லி:

பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் ராஷ்டரிய ஜனதா தளம் கட்சியின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்த நிலையில் மிகப்பெரும் அரசியல் திருப்பமாக கடந்த ஆகஸ்ட் மாதம் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் இருந்த கூட்டணியை முறித்துக்கொண்ட நிதிஷ் குமார், தனது முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். ஆனால், மறுநாளே பா.ஜ.க. ஆதரவுடன் முதல்வராக நிதிஷ் குமார் மீண்டும் பதவியேற்றார். பா.ஜ.க.வை சேர்ந்த சுஷில் குமார் மோடி துணை முதல்வராக பொறுப்பேற்று கொண்டார்.

நிதிஷ் குமார் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தது, ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் சரத் யாதவை கடும் அதிருப்திக்கு உள்ளாக்கியது. தொடர்ந்து எதிர் கருத்துக்களை கூறி வந்த சரத் யாதவின் மாநிலங்களவை கட்சி தலைவர் பதவி மற்றும் கட்சி பதவியையும் நிதிஷ் குமார் பறித்தார்.



இதையடுத்து, நிதிஷ் குமாருக்கு எதிராக அணி திரட்டி வந்த சரத் யாதவ், தேர்தல் கமிஷனில் கட்சி மற்றும் சின்னத்திற்கு உரிமை கோரி மனு அளித்தார். அதில், 'கட்சியின் பெரும்பாலான தேசிய நிர்வாகிகள், எங்களிடம் உள்ளதால், நாங்கள் தான் உண்மையான ஐக்கிய ஜனதா தளம் என அறிவிக்க வேண்டும். கட்சியின் சின்னமான அம்பு சின்னம் எங்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும்' என கூறப்பட்டிருந்தது. இதேபோல் நிதிஷ்குமார் அணியும் கட்சி மற்றும் சின்னத்திற்கு உரிமை கோரி மனு தாக்கல் செய்து, ஆதரவு உறுப்பினர்கள் கொண்ட பட்டியலையும் அளித்தது.

இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்திய தேர்தல் ஆணையம், பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஆதரவு உள்ளதால் நிதிஷ் குமாருக்கு ஐக்கிய ஜனதா தள சின்னமான அம்பு சின்னத்தை வழங்கியது.

இந்நிலையில், கட்சியின் அம்பு சின்னத்தை நிதிஷ் குமார் அணிக்கு வழங்கிய தேர்தல் ஆணைய உத்தரவுக்கு எதிராக சரத் யாதவ் தரப்பில் டெல்லி ஐகோர்ட்டில் இன்று மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. கட்சியின் அதிக நிர்வாகிகள் தங்கள் பக்கம் உள்ளதாகவும், தேர்தல் ஆணையம் நியாமான விசாரணை நடத்தாமல் சின்னத்தை ஒதுக்கி விட்டதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
Tags:    

Similar News