செய்திகள்

காஷ்மீரில் இந்த ஆண்டில் 190 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

Published On 2017-11-20 05:09 GMT   |   Update On 2017-11-20 05:09 GMT
காஷ்மீரில் இந்த ஆண்டில் இதுவரை 190 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் எனவும் இதில் 110 பேர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் எனவும் ராணுவ தலைமை அதிகாரி ஜே.எஸ்.சாந்து கூறியுள்ளார்.
ஸ்ரீநகர்:

பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் இந்தியாவுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்து வருகிறார்கள். காஷ்மீர் எல்லை வழியாக தீவிரவாதிகள் ஊடுருவி பல்வேறு நாச வேலைகளில் ஈடுபடுகிறார்கள்.

ராணுவ வீரர்கள் பல்வேறு ஊடுருவல் சதியை முறியடித்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.

இந்த ஆண்டில் இதுவரை 190 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளனர். இதுகுறித்து ராணுவ தலைமை அதிகாரி ஜே.எஸ்.சாந்து ஸ்ரீநகரில் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்த ஆண்டில் தீவிரவாதிகளின் பல்வேறு முயற்சிகளை பாதுகாப்பு படை முறியடித்து உள்ளது.

எல்லைக் கோட்டு வழியாக தீவிரவாதிகள் ஊடுருவி வரும் பல்வேறு சதிகளை ராணுவம் முறியடித்து உள்ளது. இந்த ஆண்டில் இதுவரை 190 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில் 110 பேர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள். 80 பேர் உள்ளூரைச் சேர்ந்தவர்கள். 66 பேர் எல்லையில் ஊடுருவ முயன்றபோது சுட்டுக் கொல்லப்பட்டவர்கள்.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் 125 முதல் 135 தீவிரவாதிகளை வெளியேற்றி இருக்கிறோம். இது பாதுகாப்பு படையினருக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும். இதனால் காஷ்மீர் பள்ளத்தாக்கில் தற்போது வியக்கத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது.

அரசுக்கு எதிராக யார் போராடுகிறார்கள் என்பதை நன்கு அறிந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News