செய்திகள்

உ.பி.: உள்ளாட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட்டது காங்கிரஸ்

Published On 2017-11-15 23:10 GMT   |   Update On 2017-11-15 23:11 GMT
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலுக்கான அறிக்கையை காங்கிரஸ் கட்சியினர் நேற்று வெளியிட்டனர்.
லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலுக்கான அறிக்கையை காங்கிரஸ் கட்சியினர் நேற்று வெளியிட்டனர்.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிக் காலம் முடிவடைய உள்ளதால் தேர்தல் நடத்த மாநில அரசு முடிவெடுத்துள்ளது. 438 நகராட்சிகள், 202 பஞ்சாயத்து மற்றும் 16 மாநகராட்சி இடங்களுக்கு நடைபெற உள்ள தேர்தலில் சுமார் 3 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். இதில் அயோத்யா நகர் மற்றும் மதுரா-பிருந்தாவன் நகர் ஆகிய இரு இடங்கள் புதிதாக அறிமுகமாகி உள்ளன.

அதன்படி, நவம்பர் 22, 26 மற்றும் 29 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. பதிவான வாக்குகளை எண்ணும் பணி டிசம்பர் ஒன்றாம் தேதி நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கிடையே, உள்ளாட்சி தேர்தல் அறிக்கையை பா.ஜ.க. கடந்த சில தினங்களுக்கு முன் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலுக்கான அறிக்கையை காங்கிரஸ் கட்சி நேற்று வெளியிட்டது. இதுதொடர்பாக மாநில காங்கிரஸ் தலைவர் ராஜ் பாப்பர் கூறியதாவது:

கடவுள் ராமர் பெயரை சொல்லி ஆட்சி நடத்தி வரும் பா.ஜ.க.வினர் ராமருக்கு எதிரான செயல்களை செய்து வருகின்றனர். ராமரை பின்பற்றி ஆட்சி நடத்தி வருகிறோம் எனக்கூறும் உ.பி.யின் கோரக்பூரில் ஒரே மருத்துவமனையில் ஆயிரத்துக்கு மேற்பட்ட குழந்தைகள் எப்படி இறக்க முடியும் என்பதை விளக்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து காங்கிரஸ் தனது 5 பக்க தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், தூய்மை, தரமான சாலைகள், எல்.இ.டி. தெருவிளக்குகள், மருத்துவமனைகள், முக்கிய பகுதிகளில் சி.சி.டிவி கேமராக்கள், நினைவிடம் மற்றும் பூங்காக்களுக்கு சுதந்திர போராட்ட வீரர்கள் பெயர் சூட்டுதல், டாக்சிகள், பேருந்துகள் மற்றும் கடைக்காரர்களிடம் அதிக பணம் வசூலிக்கப்படுவதற்கு முடிவு கட்டப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன.
Tags:    

Similar News