செய்திகள்

‘பத்மாவதி’ படத்துக்கு அரச குடும்பம் எதிர்ப்பு - தடை விதிக்க வலியுறுத்தல்

Published On 2017-11-09 09:34 GMT   |   Update On 2017-11-09 09:35 GMT
பத்மாவதி படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஜெய்ப்பூர் முன்னாள் அரச குடும்பத்தை சேர்ந்தவரும் பா.ஜனதா எம்.எல்.ஏ.வுமான திவ்யாகுமாரி வலியுறுத்தி உள்ளார்.
ஜெய்ப்பூர்:

சித்தூர் ராணி பத்மினியின் கதை இந்தியில் ‘பத்மாவதி’ என்ற பெயரில் சினிமாவாக தயாரிக்கப்பட்டுள்ளது.



இதில் நடிகை தீபிகா படுகோனே ராணி பத்மினியாக நடித்துள்ளார். பத்மாவதி படத்தை பிரபல டைரக்டர் சஞ்சய் லீலா பன்சாலி திரைக்கதை வசனம் எழுதி இயக்கி உள்ளார். கவிஞர் மாலிக் முகமது ஜெயாசி எழுதிய கவிதையை அடிப்படையாக கொண்டு இந்த படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

ராணி பத்மினியின் கணவராக நடிகர் ஷாகித் கபூர், ராவல் ரத்தன்சிங் வேடத்திலும், ரன்வீர் சிங் டெல்லியை ஆண்ட சுல்தான் அலாவுதீன் கில்ஜியாகவும் நடித்துள்ளார்.

இந்த படம் டிசம்பர் 1-ந்தேதி திரைக்கு வருகிறது.

ராணி பத்மினியின் வரலாற்றை தழுவி வெளிவரும் பத்மாவதி படத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத் தேர்தல் நடைபெறும் இந்த நேரத்தில் இந்த படம் வெளியானால் குறிப்பிட்ட பிரிவினர் இடையே தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பா.ஜனதா எதிர்ப்பு தெரிவித்தது. இந்த படத்துக்கு தடை விதிக்க கோரி தேர்தல் கமி‌ஷனுக்கு பா.ஜனதா கடிதம் எழுதியுள்ளது.

இந்த நிலையில் பத்மாவதி படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஜெய்ப்பூர் முன்னாள் அரச குடும்பத்தை சேர்ந்தவரும் பா.ஜனதா எம்.எல்.ஏ.வுமான திவ்யாகுமாரி வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

பத்மாவதி படம் எடுப்பது குறித்து எந்த ஒரு தயாரிப்பாளரும் உரிமை பெற்றது கிடையாது. ராணி பத்மினியின் வரலாற்றை சிதைத்து விட்டனர். இதனால் அந்த படத்தை அனுமதிக்க மாட்டோம். வரலாற்றை சரி செய்த பிறகே படம் எடுக்க வேண்டும்.

எந்த ஒரு சமுதாயத்தின் உணர்வுகளையும், வரலாற்று உண்மைகளையும் புண்படுத்தும் வகையில் எந்த ஒரு படமும் இருக்க கூடாது. உண்மையான வரலாற்றை இந்த படம் காட்டாவிட்டால் வெளியிட அனுமதிக்க மாட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல் மத்திய மந்திரி கஜேந்திரசிங், ஷெகாவத், பா.ஜனதா எம்.பி. சிந்தாமணி மாள்வியா ஆகியோரும் இந்த படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

இந்த நிலையில் பத்மாவதி படம் யாரையும் புண்படுத்தாது என்று இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

இந்த படத்தை அதிக பொறுப்புகளுடனும், நேர்மையுடனும் எடுத்துள்ளேன். ராணி பத்மினியின் கதை எப்போதுமே எனக்கு உந்துதலாக இருந்து இருக்கிறது. இந்த படம் அவரின் துணிச்சலையும், தியாகத்தையும் போற்றுகிறது.

ஒரு சில வதந்திகளின் காரணத்தால் இந்த படம் விவாதத்துக்குறியதாக மாறிவிட்டது.

படத்தில் ராணி பத்மாவதிக்கும், அலாவுதீன் கில்ஜிக்கும் கனவுப்பாடல் இருப்பதாக வதந்தி பரவி இருக்கிறது. மற்றவர்களின் உணர்வுகளை காயப்படுத்துமாறு ராணி பத்மாவதிக்கும், அலாவுதீன் கில்ஜிக்கும் இடையே எந்தவிதமான காட்சியும் இல்லை.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News