செய்திகள்

போலி ஆதார் கார்டு தயாரித்த கும்பலுக்கு மூளையாக செயல்பட்ட நபர் கைது

Published On 2017-11-08 10:25 GMT   |   Update On 2017-11-08 10:26 GMT
உத்தரபிரதேச மாநிலத்தில் போலி ஆதார் கார்டு தயாரிக்கும் கும்பலுக்கு மூளையாக செயல்பட்ட முக்கிய புள்ளியை சிறப்பு அதிரடிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
லக்னோ:

நாட்டில் பல்வேறு அரசுத் திட்டத்தின் பயன்களைப் பெறுவது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு ஆதார் அடையாள அட்டை பயன்படுத்தப்படுகிறது.  வங்கி கணக்கு, பான் எண் போன்றவற்றிலும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் அடையாள அட்டையை சில தனிப்பட்ட நபர்கள் சட்டவிரோதமாக போலியாக தயாரிக்கப்படுவது தெரியவந்தது.

இதுகுறித்து ஆதார் அட்டையை தயாரிக்கும் பணியில் ஈடுபட்ட 'உதய்’ நிறுவனத்தின் மூத்த அதிகாரி லக்னோ போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, ஆதார் மோசடி கும்பலை பிடிக்க சிறப்பு அதிரடிப் படை அமைக்கப்பட்டது. இந்த அதிரடிப்படை போலீசார் கடந்த செப்டம்பர் மாதம் கான்பூரில் தீவிர சோதனை நடத்தி 10 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து போலி கைரேகை பிரிண்டுகள், கைரேகை மற்றும் கண் கருவிழி ஸ்கேனர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தொடர்ந்து இதுபற்றி விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில், போலி ஆதார் அட்டை கும்பலின் மூளையாக செயல்பட்ட நபரை சிறப்பு அதிரடிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபரின் பெயர் துர்கேஷ் குமார் மிஸ்ரா. மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், உதய் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிறுவனத்தில் அவர் துணை மேலாளராக பணியாற்றியது தெரியவந்தது. இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி போலி கைரேகை பிரிண்டுகள் மற்றும் சாப்ட்வேர்களை போலி ஆதார் கும்பலுக்கு கொடுத்ததும் தெரியவந்தது.
Tags:    

Similar News