செய்திகள்

பா.ஜனதாவுக்கு குஜராத் தேர்தல் கடும் சவாலாக இருக்கும் - சத்ருகன் சின்கா

Published On 2017-11-02 05:45 GMT   |   Update On 2017-11-02 05:45 GMT
பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி. ஆகியவற்றின் காரணமாக மக்கள் மிகவும் கோபத்தில் உள்ளதாகவும் குஜராத் தேர்தல் பா.ஜனதாவுக்கு கடும் சவாலாக இருக்கும் எனவும் சத்ருகன் சின்கா கூறியுள்ளார்.
புதுடெல்லி:

பாரதீய ஜனதா தலைவர்களில் ஒருவரும், எம்.பி.யுமான நடிகர் சத்ருகன் சின்கா அந்த கட்சியை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார்.

இந்த நிலையில் அவர் பாரதீய ஜனதாவை மீண்டும் விமர்சனம் செய்துள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் மனிஷ் திவாரி எழுதிய புத்தகம் தொடர்பபான கலந்துரையாடல் நிகழ்ச்சி டெல்லியில் நடந்தது. இதில் பங்கேற்று சத்ருகன் சின்கா பேசியதாவது:-

வக்கீல் (மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி) பொருளாதாரம் குறித்து பேசும்போது, சின்னதிரை நடிகை (ஸ்மிருதி இரானி) மத்திய மந்திரியாக இருக்கும்போதும், தேனீர் விற்றவரால் (பிரதமர் மோடி) நாட்டின் உயர் பதவியை வகிக்க முடியும்போது, பொருளாதாரம் குறித்து நான் ஏன் பேசக்கூடாது.



கட்சி மற்றும் தனி நபரை விட நாட்டின் நலன்தான் மிகப்பெரியது. நான் நாட்டின் நலனுக்காக பேசும் போது, கட்சியின் நலனும் சேர்ந்து இருக்கிறது.

பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பிறகு ஜி.எஸ்.டி. கொண்டு வரப்பட்டது. இது பாகற்காயை வேப்பிலை இலையுடன் சேர்ந்து கொடுத்தது போல இருக்கிறது. ரூபாய் நோட்டு வாபஸ். ஜி.எஸ்.டி. ஆகியவற்றின் காரணமாக மத்திய அரசு மீது மக்கள் கோபத்தில் இருக்கிறார்கள்.



ஏராளமான பேர் வேலை இல்லாமல் தவிக்கிறார்கள். வியாபாரம் முடங்கி விட்டது. பல வீடுகள் நொறுங்கி விட்டன. இதையெல்லாம் பாரதீய ஜனதா தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

எனவே குஜராத் தேர்தலை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. இந்த தேர்தல் பாரதீய ஜனதாவுக்கு கடும் சவாலாக இருக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பிரதமர் மோடியின் ஜி.எஸ்.டி. பணமதிப்பு நீக்கம் ஆகியவற்றை சத்ருகன் சின்கா தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News