செய்திகள்

விவசாயிகள் நலனுக்காக எடுத்த நடவடிக்கைகள் என்ன?: தமிழக அரசு பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

Published On 2017-10-24 04:07 GMT   |   Update On 2017-10-24 04:14 GMT
விவசாயிகள் நலனுக்காக எடுத்த நடவடிக்கைகளை தெரிவிக்குமாறு தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி:

தமிழ்நாடு பொதுநல வழக்கு மையம் மூலமாக சுப்ரீம் கோர்ட்டில் விவசாயிகள் தாக்கல் செய்த மனு நிலுவையில் உள்ளது. அதில், ‘ரூ.40 ஆயிரம் கோடி வறட்சி நிவாரணம் அளிக்க வேண்டும், பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும், அரிசி, சிறு தானியங்கள் உள்ளிட்டவற்றுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மனு, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் கான்வில்கர், சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் கோர்ட்டுக்கு உதவும் ஆலோசகராக வக்கீல் கோபால் சங்கரநாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த மனுவுக்கு தமிழக அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திர மனுவில், ‘கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத வறட்சி ஏற்பட்டுள்ளது. அதனால் விவசாயிகள் பிரச்சினையில் மிகுந்த அக்கறை செலுத்தி வருகிறோம். 7 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு ரூ.4 ஆயிரம் கோடிக்கு மேல் பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. தற்கொலை உள்ளிட்ட காரணங்களால் இறந்த 82 விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதிஉதவி அளிக்கப்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டு இருந்தது.

தமிழக அரசின் பிரமாண பத்திர மனுவின் அடிப்படையில், கோர்ட்டு ஆலோசகர் கோபால் சங்கரநாராயணன் சில யோசனைகளை தெரிவித்து இருந்தார்.

ஜப்தி நடவடிக்கையில் இருந்து விவசாயிகளை காக்குமாறும், தானியங்கள் கொள்முதலில் இடைத்தரகர்கள் ஆதிக்கத்தை ஒடுக்குமாறும் தமிழக அரசை சுப்ரீம் கோர்ட்டு கேட்டுக்கொண்டது.



இந்நிலையில், இந்த மனு, நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கோர்ட்டு ஆலோசகர் கோபால் சங்கரநாராயணன், ‘தமிழ்நாட்டில் விவசாயிகள் நிலைமை பற்றிய கள நிலவரத்தை அறிந்து கொள்ள மாநில அரசிடம் இருந்து எனக்கு கூடுதல் தகவல்கள் தேவைப்படுகிறது. எல்லா தானியங்களுக்கும் மத்திய அரசால் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதா? அதை தமிழக அரசு அமல்படுத்துகிறதா?’ என்று கேட்டார்.

அதையடுத்து, கோர்ட்டு ஆலோசகர் அளித்த யோசனைகளை தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும், விவசாயிகள் நலனுக்காக என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்பது பற்றி 4 வாரங்களுக்குள் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Tags:    

Similar News