செய்திகள்

மராட்டிய மாநிலத்தில் போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக் வாபஸ்

Published On 2017-10-20 22:27 GMT   |   Update On 2017-10-20 22:27 GMT
நீதிமன்ற உத்தரவின் பேரில் மராட்டிய மாநில போக்குவரத்து ஊழியர்கள் தங்களின் வேலைநிறுத்தத்தை நேற்று நள்ளிரவு முதல் கைவிட்டுள்ளனர்.
மும்பை:

மராட்டிய மாநிலத்தில் 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்தி ஊதிய உயர்வு வழங்கும்படி போக்குவரத்து துறை தொழிலாளர்கள் வலியுறுத்தி வந்தனர். இதுதொடர்பாக போக்குவரத்து துறை மந்திரி திவாகர் ரவோத்துடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இதைத்தொடர்ந்து, கடந்த 17-ம் தேதி நள்ளிரவு முதல் போக்குவரத்து ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனால் தீபாவளியை கொண்டாட சொந்த ஊர்களுக்கு சென்ற பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர்.

இதற்கிடையே, பொதுமக்களை பாதிக்கும் வகையில் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடக் கூடாது. அது சட்டவிரோதமானது. எனவே வேலைநிறுத்தத்தை உடனடியாக வாபஸ் பெறவேண்டும் என மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவு குறித்து போக்குவரத்து துறை ஊழியர் சங்கங்கள் நேற்று ஆலோசனை நடத்தின. அப்போது வேலைநிறுத்தத்தை வாபஸ் பெறுவது என முடிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து ஊழியர் சங்க நிர்வாகிகள் கூறுகையில், கோர்ட் உத்தரவுக்கு மதிப்பளிக்கும் வகையில் நள்ளிரவு முதல் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்படுகிறது என தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News