செய்திகள்

வடகிழக்கு மாநிலங்களில் நாய்கறி விற்பனை அமோகம் - விலங்கு நல ஆர்வலர்கள் கண்டனம்

Published On 2017-10-19 05:12 GMT   |   Update On 2017-10-19 05:12 GMT
அசாம்-மிசோரம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் நாய்கறி விற்பனை அமோகமாக நடக்கிறது. நாய்கள் இறைச்சிக்காக கடத்தப்படுவதற்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கவுகாத்தி:

சீனாவில் நாய்கறி விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. அங்கு நாய்கறி திருவிழா நடைபெறும் நாளன்று ஆயிரக்கணக்கான நாய்கள் கொல்லப்படுகின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அங்கு எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்வதில்லை.

அதேபோன்ற நிலை இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்களான அசாம், மிசோரம், திரிபுரா, நாகலாந்து உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெறுகிறது. இங்கும் நாய்க்கறி விற்பனை நடக்கிறது.

அதற்காக ஏராளமான நாய்கள் கடத்திச் செல்லப்படுகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு மிசோரம் மாநிலத்துக்கு மினி லாரியில் நாய்கள் கடத்திச் செல்லப்பட்ட காட்சி சமூக வலை தளங்களில் வீடியோ ஆக பரவியது. அதில் கால்கள் கட்டப்பட்ட நாய்கள் சாக்கு மூட்டைகளில் அடைக்கப்பட்டு கடத்தப்படும் நிலையில் இருந்தது.

அவை மிசோரம் மாநில தலைவர் ‌ஷவால் நகரில் இறைச்சிக்காக கடத்தப்படுவது தெரியவந்தது. அதைப் பார்த்த நாய்கள் நல ஆர்வலர்கள் கொதிப்படைந்தனர்.

பின்னர் ‘வாட்ஸ்அப்’ நண்பர்கள் குழுக்களுடன் தொடர்பு கொண்டு மிசோரம் மாநில போலீஸ் டி.ஜி.பி.யுடன் தொடர்பு கொண்டு இறைச்சிக்காக நாய்கள் கடத்தப்படுவதை தடுக்கும்படி கோரிக்கை விடுத்தனர். அதைத் தொடர்ந்து கொலாசிப் நகரில் அந்த மினி லாரியை மடக்கிய போலீசார் கடத்தப்பட்ட 17 நாய்களை மீட்டனர்.

அன்புடன் வளர்க்கப்படும் நாய்கள் இறைச்சிக்காக கடத்தப்படுவதற்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இறைச்சிக்காக நாய்கள் கொல்லப்படுவது சட்டப்படி குற்றம் என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்த பிறகும் இதுபோன்று நடந்து கொள்வது கண்டனத்துக்குரியது என கூறியுள்ளனர்.

Tags:    

Similar News