செய்திகள்

தேசிய கீதத்துடன் ‘வந்தே மாதரம்’ பாடலை சமமாக கருத கோரிய வழக்கு தள்ளுபடி: டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2017-10-18 00:19 GMT   |   Update On 2017-10-18 00:20 GMT
வந்தேமாதரம் பாடலுக்கு தனித்துவம் உள்ளதால் அதை ஜன கண மன என்னும் தேசிய கீதத்துடன் சமமாக கருத முடியாது என்ற வாதத்தை ஏற்று வழக்கை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
புதுடெல்லி:

டெல்லி ஐகோர்ட்டில் கவுதம் ஆர். மொரார்கா என்பவர் ஒரு பொது நல வழக்கு தொடுத்தார்.

அந்த வழக்கில் அவர், “ரவீந்திரநாத் தாகூர் எழுதிய ஜன கண மன என்னும் நமது தேசிய கீதத்தையும், பங்கிம் சந்திர சட்டர்ஜி இயற்றிய வந்தே மாதரம் என்ற நாட்டுப்பாடலையும் சமமாகக் கருத வேண்டும், வந்தே மாதரம் பாடலைப் பாடுகிறபோதும், இசைக்கிறபோதும் அதற்கு உரிய கண்ணியத்தையும், மரியாதையையும் வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி கீதா மிட்டல், நீதிபதி ஹரி சங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்தது. “இந்தியர்களின் மனங்களில் வந்தேமாதரம் பாடலுக்கு தனித்துவமும், சிறப்புமான ஒரு இடம் உள்ளது. ஆனால் அதை ஜன கண மன என்னும் தேசிய கீதத்துடன் சமமாக கருத முடியாது” என்று தெரிவிக்கப்பட்டது.

எனவே வழக்குதாரரின் கோரிக்கையை ஏற்கக்கூடாது என வலியுறுத்தப்பட்டது.

இதையடுத்து வழக்கை தள்ளுபடி செய்து பொறுப்பு தலைமை நீதிபதி கீதா மிட்டல் அமர்வு உத்தரவிட்டது.
Tags:    

Similar News