செய்திகள்

ஆயுத தரகர் விவகாரத்தில் ‘எந்த விசாரணையையும் எதிர்கொள்ள ராபர்ட் வதேரா தயார்’: காங்கிரஸ் அறிவிப்பு

Published On 2017-10-17 23:27 GMT   |   Update On 2017-10-17 23:27 GMT
ஆயுத தரகர் விமான டிக்கெட் முன்பதிவு செய்தது தொடர்பாக எந்த விசாரணையையும் எதிர்கொள்ள ராபர்ட் வதேரா தயார் என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா கூறியுள்ளார்.
பெங்களூரு:

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா (வயது 48). இவர் மீது அரியானா, ராஜஸ்தான் மாநிலங்களில் நில ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன.இந்த நிலையில், தலைமறைவாக உள்ள பிரபல ஆயுத தரகர் சஞ்சய் பண்டாரி, ராபர்ட் வதேராவுக்கு விமானத்தில் சொகுசு வகுப்பில் பயணம் செய்ய டிக்கெட் முன்பதிவு செய்ததாக நேற்று முன்தினம் டி.வி. சேனல் ஒன்று வெளியிட்ட தகவல், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுபற்றி சோனியாவும், ராகுலும் தங்கள் மவுனத்தை கலைக்க வேண்டும் என்று பாரதீய ஜனதா கட்சி கோரியது. அந்த கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், ராணுவ மந்திரியுமான நிர்மலா சீதாராமன், “சோனியாவும், ராகுலும் அமைதியாக இருந்தால், ராபர்ட் வதேரா மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டியதாகிவிடும்” என கூறினார்.

இந்த நிலையில், காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா பெங்களூருவில் நேற்று நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர், “ராபர்ட் வதேராவைப் பற்றிய குற்றச்சாட்டுகளைப் பொருத்தமட்டில் நாங்கள் கூறுவது, நரேந்திர மோடிதான் கடந்த 41 மாதங்களாக ஆட்சியில் உள்ளார். அவர்களது அரசுதான் அரியானாவிலும், ராஜஸ்தானிலும் உள்ளன. அவர்கள் விரும்புகிற எந்தவொரு விசாரணைக்கும் உத்தரவிட்டு, நடத்தட்டும். நேர்மையான, சுதந்திரமான விசாரணை நடத்தி, முடிவுக்கு வரட்டும்” என்று கூறினார். 
Tags:    

Similar News