செய்திகள்

பஞ்சாப்பில் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் படுகொலை: விரைந்து நடவடிக்கை எடுக்க ராஜ்நாத் சிங் வலியுறுத்தல்

Published On 2017-10-17 18:13 GMT   |   Update On 2017-10-17 18:13 GMT
பஞ்சாப்பில் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் படுகொலையில் முதல் மந்திரி விரைந்து செயல்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் வலியுறுத்தி உள்ளார்.
லூதியானா:

பஞ்சாப்பில் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் படுகொலையில் முதல் மந்திரி விரைந்து செயல்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் வலியுறுத்தி உள்ளார்.

பஞ்சாப் மாநிலம் லூதியானாவின் ககன்தீப் காலனியில் வசித்து வந்தவர் ரவீந்தர் (60). ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சேர்ந்த இவர், தினமும் ஆர்.எஸ்.எஸ். நடத்தும் ஷாகா பயிற்சி வகுப்புக்கு செல்வது வழக்கம். இன்றும் வழக்கம்போல் பயிற்சிக்கு சென்ற அவர் பயிற்சி முடிந்ததும் வீடு திரும்பினார்.

கங்காதீப் காலனியை நெருங்கியபோது பைக்கில் வந்த 2 நபர்கள், திடீரென அவரை வழிமறித்து சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே ரவீந்தர் உயிரிழந்தார்.

தகவலறிந்த போலீசார் சம்பவ இடம் சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்துக்கு போலீஸ் கமிஷனர் நேரில் சென்று விசாரணை நடத்தினார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

கொலையாளிகளை பிடிக்க 3 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இது திட்டமிட்டு நடைபெற்ற படுகொலை என ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் ரவீந்தர் படுகொலையில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய மந்திரி ராஜ்நாத் சிங், பஞ்சாப் முதல் மந்திரியிடம் கேட்டுக் கொண்டார்.

இதுதொடர்பாக பஞ்சாப் மாநில பா.ஜ.க. தலைவர் கமல் சர்மா கூறுகையில், ஆர்.எஸ்.எஸ். தலைவர் ரவீந்தர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், பஞ்சாப் முதல் மந்திரி கேப்டன் அமரீந்தர் சிங்கை தொடர்பு கொண்டார். அப்போது இந்த கொலை தொடர்பாக உரிய விசாரணை நடத்தி விரைவில் குற்றவாளிகளை பிடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News