செய்திகள்

சபரிமலையில் பெண்களை அனுமதிக்க கோரிய வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்

Published On 2017-10-13 05:58 GMT   |   Update On 2017-10-13 05:58 GMT
சபரிமலை கோவிலில் பெண்கள் தரிசனம் செய்ய அனுமதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு, 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில், 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இதை எதிர்த்தும், அனைத்து பெண்களையும் கோவிலுக்குள் அனுமதிக்க உத்தரவிடக் கோரியும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து வந்தது.

சபரிமலை கோவிலை நிர்வாகம் செய்யும் திருவாங்கூர் தேவசம் போர்டு மற்றும் ஆலயத்தின் பரம்பரை அறங்காவலரான பந்தளம் மகாராஜா ஆகியோர் தரப்பில் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பான தங்கள் முடிவை கடந்த பிப்ரவரி மாதம் உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்தது.

இந்நிலையில், இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இவ்வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவதாக நீதிபதிகள் அறிவித்தனர். கோவிலுக்குள் பெண்கள் செல்வதை கட்டுப்படுத்த முடியுமா? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள், இந்த பிரச்சனைக்கு அரசியலமைப்பு அமர்வு மூலம் தீர்வு காண வேண்டும் என்று பரிந்துரை செய்தனர்.

எனவே, இந்த வழக்கை இனி 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும்.
Tags:    

Similar News