செய்திகள்

சோலார் பேனல் ஊழல் வழக்கு: உம்மன்சாண்டியிடம் மீண்டும் விசாரணை நடத்த கேரள அரசு உத்தரவு

Published On 2017-10-11 10:13 GMT   |   Update On 2017-10-11 10:13 GMT
சோலார் பேனல் ஊழல் வழக்கு தொடர்பாக கேரளாவின் முன்னாள் முதல் மந்திரி உம்மண்சாண்டியிடம் மீண்டும் விசாரணை நடத்த கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.
திருவனந்தபுரம்:

கேரளாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள வீடுகளில் சோலார் பேனல் பதித்துத் தருவதாகக் கூறி மக்களிடம் பல கோடிகள் வசூலித்ததாக பிஜு ராதாகிருஷ்ணன் மற்றும் சரிதா நாயர் ஆகியோர் மீது புகார் எழுந்தது. இதில், கேரள மாநிலத்தின் முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி மற்றும் முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் ஆர்யாடன் ஆகியோருக்கு லஞ்சம் கொடுத்ததாக புகார் எழுந்தன. இந்த வழக்கில் சரிதா நாயர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு சிறையில் உள்ளார்.

சோலார் பேனல் திட்டத்துக்காக முன்னாள் முதல்வர் உம்மண் சாண்டிக்கு ரூ.1.60 கோடி லஞ்சம் கொடுத்ததாக பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் குருவில்லா தெரிவித்திருந்தார்.

ஆனால், சோலார் பேனல் திட்டம் செயல்படுத்தப்படாததால் பணம் கேட்டு குருவில்லா முதல்வர் உம்மன்சாண்டி உள்ளிட்ட 6 பேர் மீது 2015-ல் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் கடந்த ஆண்டு அக்டோபர் 24-ம் தேதி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், குருவில்லாவுக்கு 12 சதவீத வட்டியுடன் ரூ.1.60 கோடியை 6 பேரும் திருப்பி அளிக்க வேண்டும் என தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து உம்மன்சாண்டி தரப்பில் பெங்களூரு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி பாட்டீல் மோகன்குமார் பீமனகவுடா,  உம்மண்சாண்டிக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் இல்லை என்று கூறி அவரை விடுவித்தார். அதேசமயம், மற்ற 5 பேர் மீதான விசாரணை தொடரும் என  தீர்ப்பளித்தார்.

இந்நிலையில், சோலார் பேனல் ஊழல் வழக்கு தொடர்பாக கேரளா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி மற்றும் காங்கிரஸ் தலைவர்களிடம் மீண்டும் விசாரணை நடத்த கேரள அரசு முடிவு செய்துள்ளது.

சோலார் பேனல் ஊழல் தொடர்பாக விசாரணை நடத்த நீதிபதி சிவராஜன் தலைமையில் கமிஷன் அமைக்கப்பட்டது. அந்த கமிஷன் அளித்த பரிந்துரையின்படி முன்னாள் முதல் மந்திரி உம்மன்சாண்டி, அவரது அமைச்சரவை சகாக்கள் மற்றும் காங்கிரஸ் தலைவர்களிடம் விசாரணை நடத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான உத்தரவை முதல்வர் பினராயி விஜயன் பிறப்பித்துள்ளார்.

இந்த வழக்கில் தொடர்புடைய முன்னாள் மந்திரிகள் அடூர் பிரகாஷ், அனில்குமார் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் வேணுகோபால், ஹிபி ஏடன் உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News