செய்திகள்

குஜராத்தை தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மராட்டிய அரசு முடிவு

Published On 2017-10-10 10:54 GMT   |   Update On 2017-10-10 10:54 GMT
மத்திய அரசின் அறிவுறுத்தலின் பேரில் குஜராத் மாநிலத்தை போல பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரியை குறைக்க மராட்டிய மாநில அமைச்சரவை முடிவெடுத்துள்ளது.
மும்பை:

மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதத்துக்கு 2 முறை மாற்றியமைத்து வந்தன. சுமார் 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்ட இந்த நடைமுறை கடந்த ஜூன் மாதம் கைவிடப்பட்டது.

அதன்பின்னர் பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் நிர்ணயிக்கப்படும் முறை அமுலுக்கு வந்தது. இந்த புதிய நடைமுறை காரணமாக கடந்த 3 மாதங்களில் இந்த எரிபொருட்களின் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வந்தது.

எனவே பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதைதொடர்ந்து பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.2 குறைத்து மத்திய அரசு இந்த மாத தொடக்கத்தில் அறிவித்தது.

இந்த நிலையில் பெட்ரோல், டீசல் மீதான வாட்வரியை 5 சதவீதம் குறைக்க வேண்டும் என்று மாநில அரசுகளை பெட்ரோலிய துறை மந்திரி தர்மேந்திர பிரதான் வலியுறுத்தி வந்தார். அவ்வாறு செய்தால்தான் பொதுமக்கள் மேலும் பயன்பெறுவார்கள் என்று கூறியிருந்தார்.

இதையடுத்து, பெட்ரோல், டீசல் மீதான வாட்வரியை 4 சதவிகிதம் குறைப்பதாக குஜராத் மாநில அரசு அறிவித்தது. இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குஜராத் மாநிலத்தை தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மராட்டி மாநில அரசு முடிவெடுத்துள்ளது. இன்று நடைபெற்ற அம்மாநில அமைச்சரவை கூட்டத்தில் பெட்ரோல் விலையை ரூ.2 மற்றும் டீசல் விலையை ரூ.1 குறைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News