செய்திகள்

ரெயில்வே ஓட்டல் ஒதுக்கீடு வழக்கு: அமலாக்கத்துறை முன் ஆஜராகி லல்லு மகன் விளக்கம்

Published On 2017-10-10 08:49 GMT   |   Update On 2017-10-10 08:49 GMT
ரெயில்வே ஓட்டல்களை முறைகேடாக தனியாருக்கு ஒதுக்கீடு செய்ததாக எழுந்த புகாரில் பீகார் முன்னாள் முதல்வர் லல்லு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கமளித்தார்.
புதுடெல்லி:

பீகார் முன்னாள் முதல்வர் லல்லு பிரசாத் யாதவ். ராஷ்டீரிய ஜனதா தள தலைவரான இவர் 2004 முதல் 2009 வரை மத்திய ரெயில்வே துறை மந்திரியாக இருந்தார்.

2006-ம் ஆண்டில் அவரது பதவிக் காலத்தில் ரெயில்வேக்கு சொந்தமாக பூரி மற்றும் ராஞ்சியில் இருந்த 2 ஓட்டல்கள் தனியார் நிறுவனத்துக்கு குத்தகைக்கு விடப்பட்டது. இந்திய ரெயில்வே மற்றும் சுற்றுலா கழகத்தின் (ஐ.ஆர்.சி.டி.சி.) கட்டுப்பாட்டில் இருந்த இந்த இரண்டு ஓட்டல்களின் நிர்வாக உரிமை சுஜாதா ஓட்டல் லிமிடெட் என்ற தனியார் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இதற்கு லஞ்சமாக பீகாரில் 3 ஏக்கர் நிலத்தை பினாமி கம்பெனியில் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக லல்லுபிரசாத் யாதவ், அவரது மனைவி ராப்ரி தேவி, மகன் தேஜஸ்வி உள்பட 6 பேர் மீது சி.பி.ஐ. கடந்த ஜூலை 7-ந்தேதி வழக்கு பதிவு செய்து இருந்தது.

இதே வழக்கில் சட்டவிரோதமாக பணப் பறிமாற்றம் நடைபெற்றதாகவும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது. இது தொடர்பாக இன்று ஆஜராகி விளக்கமளிக்குமாறு அவருக்கு அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

இதையடுத்து, இன்று அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு வந்த அவர் விசாரணை அதிகாரி முன்னிலையில் ஆஜராகி விளக்கமளித்தார். மேலும், லல்லு பிரசாத்தின் மனைவி ராப்ரி தேவி நாளை இதே வழக்கில் ஆஜராகவும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
Tags:    

Similar News