செய்திகள்

பாராளுமன்றம், சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த அனைத்து கட்சிகளின் ஆதரவு தேவை: தேர்தல் கமிஷனர் பேட்டி

Published On 2017-10-09 00:40 GMT   |   Update On 2017-10-09 00:40 GMT
பாராளுமன்றம், சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு அனைத்து கட்சிகளின் ஆதரவு தேவை என்று தேர்தல் கமிஷனர் ஓ.பி. ராவத் கூறினார்.
புதுடெல்லி:

பாராளுமன்றம், சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு அனைத்து கட்சிகளின் ஆதரவு தேவை என்று தேர்தல் கமிஷனர் ஓ.பி. ராவத் கூறினார்.

தேர்தல் கமிஷனர் ஓ.பி. ராவத், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது, பதவியில் உள்ள அரசுகள் கொள்கைகளை வகுப்பதற்கும், தேர்தல் நடத்தை விதிகள் என்ற பெயரால் இடையூறு இல்லாமல் திட்டங்களை நீண்டகாலம் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்துவதற்கும் போதுமான அவகாசத்தைத் தரும் என்பது எப்போதும் தேர்தல் கமிஷனின் கருத்தாக அமைந்துள்ளது.

தவிரவும், ஒரே நேரத்தில் பாராளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடத்துவது என்றால், அதற்கு அனைத்து கட்சிகளின் ஏகோபித்த ஆதரவையும் பெற வேண்டும்.



அது மட்டுமின்றி, இதற்கு தேவையான திருத்தங்களை அரசியல் சாசனத்திலும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திலும் செய்தால் மட்டுமே பாராளுமன்றத்துக்கும், சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது சாத்தியப்படும்.

தற்போதைய சட்ட விதிகள், அரசியல் சாசன விதிகள், பாராளுமன்றம் அல்லது சட்டசபைகளின் ஆயுள் காலம் முடிவதற்கு 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்று கூறுகின்றன.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திலும், அரசியல் சாசனத்திலும் தேவையான மாற்றங்களை செய்து முடித்து விட்டால், 6 மாதங்களுக்குள் பாராளுமன்றத்துக்கும், சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தி விடலாம்.

இதற்கு 24 லட்சம் மின்னணு ஓட்டு எந்திரங்களும், ஒப்புகைச்சீட்டு வழங்கும் எந்திரங்களும் தேவைப்படும்.

மின்னணு ஓட்டு எந்திரங்களுக்கும், ஒப்புகைச்சீட்டு வழங்கும் எந்திரங்களுக்கும் ஆர்டர் கொடுத்துள்ளோம்.

2019-ம் ஆண்டு மத்திக்குள் அல்லது தேவைக்கு ஏற்ப அதற்கு முன்னதாகவோ தேவையான அளவு மின்னணு ஓட்டு எந்திரங்களையும், ஒப்புகைச்சீட்டு வழங்கும் எந்திரங்களையும் பெற்றுவிட முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடி, பாராளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படவேண்டும் என்று வலியுறுத்தி கூறியுள்ள நிலையிலும், நாட்டு நலன் கருதி 2024-ம் ஆண்டு முதல் பாராளுமன்றத்துக்கும், சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தியாக வேண்டும் என்று நிதி ஆயோக் பரிந்துரை செய்துள்ள சூழலிலும், தேர்தல் கமிஷனர் ஓ.பி. ராவத்தின் இந்த கருத்துக்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. 
Tags:    

Similar News