செய்திகள்

மத்தியப்பிரதேசம்: சர்தார் சரோவர் திட்டத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக இடுப்பளவு தண்ணீரில் நின்று போராட்டம்

Published On 2017-09-17 20:29 GMT   |   Update On 2017-09-17 20:32 GMT
சர்தார் சரோவர் திட்டத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக மத்தியப்பிரதேச மாநிலத்தில் நர்மதை அணை பாதுகாப்பு திட்ட அமைப்பினர் கடந்த மூன்று நாட்களாக இடுப்பளவு தண்ணீரில் நின்று போராட்டம் நடத்தினர்
போபால்:

குஜராத்தின் நவகம் பகுதியில் நர்மதை ஆற்றின் குறுக்கே சர்தார் சரோவர் அணை கட்டப்பட்டு உள்ளது. இந்த திட்டம் 56 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்டது. இந்த அணையின் உயரம் 129.58 மீட்டராக நிர்ணயிக்கப்பட்டு கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டது. 1980-ல் கட்டுமானப்பணிகள் தொடங்கப்பட்ட இந்த அணைத்திட்டம் பல்வேறு சர்ச்சைகள் மற்றும் இடையூறுகளை சந்தித்தது. இந்த அணையால் ஏராளமான மக்கள் பாதிக்கப்படுவதாக கூறி சமூக ஆர்வலர் மேதா பட்கரின் நர்மதை அணை பாதுகாப்பு திட்ட அமைப்பு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இருப்பினும், பல எதிர்ப்புகளை மீறி கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில், சமீபத்தில் 138.68 மீட்டராக உயரம் அதிகரிக்கப்பட்ட இந்த அணையை பிரதமர் நரேந்திர மோடி தனது பிறந்தநாளான நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நாட்டுக்கு அர்ப்பணித்தார். கோலாகலமாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி நிதின் கட்காரி, குஜராத் மாநில முதல்வர் விஜய் ரூபானி உள்பட பலர் கலந்து கொண்டனர்

இந்நிலையில், இத்திட்டத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு நிவாரணம் அளிக்க வேண்டும் என சமூக ஆர்வலர் மேதா பட்கர் தலைமையில் மத்தியப்பிரதேச மாநிலத்தில் நர்மதை அணை பாதுகாப்பு திட்ட அமைப்பு சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. அம்மாநிலத்தின் பர்வானி மாவட்டத்தில் நர்மதை நதியில் மேதா பட்கர் தனது 36 ஆதரவாளர்களுடன் கடந்த மூன்று நாட்களாக இடுப்பளவு தண்ணீரில் நின்று போராட்டம் நடத்தினார். நேற்று அணை திறக்கப்பட்டதையடுத்து அவர்கள் தங்கள் போராட்டத்தை முடித்துக் கொண்டனர்.
Tags:    

Similar News