செய்திகள்

எளிதான கணக்குக்கு தவறான விடை கூறிய கல்வி மந்திரி: வைரலாகும் வீடியோ

Published On 2017-09-16 03:04 GMT   |   Update On 2017-09-16 03:04 GMT
உத்தரகாண்ட் மாநிலத்தின் கல்வி மந்திரி, எளிதான கணக்குக்கு தவறான விடை கூறியது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
டேராடூன்:

உத்தரகாண்ட் மாநிலத்தில் திரிவேந்திர சிங் ராவத் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி செய்து வருகிறது. இங்கு மாநில கல்வி அமைச்சராக இருந்து வருபவர் அரவிந்த் பாண்டே.

இவர் கடந்த திங்கட்கிழமை டேராடூனில் உள்ள பெண்கள் பள்ளிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்குள்ள ஒரு வகுப்பில் மாணவிகளுக்கு ஆசிரியை ஒருவர் அறிவியல் பாடம் நடத்தி கொண்டிருந்தார்.

வகுப்புக்குள் நுழைந்த அமைச்சர், ஆசிரியையிடம் எளிதான கேள்வி ஒன்று கேட்டார். -1 என்ற எண்ணுடன் -1 என்ற எண்ணை கூட்டினால் என்ன விடை கிடைக்கும் என கேட்டார்.

இதற்கு ஆசிரியை - 2 என சரியாக பதில் அளித்தார். ஆனால், இந்த பதில் தவறு எனக்கூறிய மந்திரி, 0 தான் சரியான விடை என தெரிவித்தார். அதன்பின்னர் வகுப்பறையை விட்டு செல்வதற்கு முன் மாணவர்களுக்கு ஆசிரியை ஒழுங்காக பாடம் நடத்த வேண்டும் எனவும் எச்சரித்து சென்றார்.

இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மந்திரியின் இந்த செயலை கடுமையாக விமர்சனம் செய்து பலர் கருத்து வெளியிட்டு இருந்தனர். மந்திரி ஆசிரியர்களை அவமதித்து விட்டார் என கடும் கண்டனமும் எழுந்துள்ளது.

இதுகுறித்து மந்திரி அரவிந்த் பாண்டே கூறுகையில், அந்த வகுப்பில் ஆசிரியையும், மாணவிகளும், எந்த புத்தகமும் வைத்திருக்கவில்லை. ஒரு கையேடு போன்ற புத்தகத்தை வைத்து ஆசிரியை நடத்திக் கொண்டிருந்தார். அவரை அவமதிக்கும் நோக்கம் எனக்கு இல்லை என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News