செய்திகள்

தெலுங்கானாவில் சோகம்: வீட்டு உரிமையாளர் மறுத்ததால் இரவு முழுவதும் சாலையில் மகன் சடலத்துடன் தவித்த தாய்

Published On 2017-09-15 09:46 GMT   |   Update On 2017-09-15 09:46 GMT
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் வீட்டு உரிமையாளர் உள்ளேவிட மறுத்ததால், இரவு முழுவதும் சாலையில் மகன் சடலத்தை வைத்து தாய் பரிதவித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
ஐதராபாத்:

தெலுங்கானா மாநிலம் மெகபூபாநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஈஸ்வரம்மா. இவர் தனது இரண்டு மகன்களுடன் ஐதராபாத்தில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். ஈஸ்வரம்மாவின் மகன் சுரேஷ் (10). 6-ம் வகுப்பு படித்து வந்தான். இவன் டெங்கு காய்ச்சலுக்காக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தான்.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுரேஷ் நேற்று இரவு உயிரிழந்தான். இதையடுத்து சுரேஷ் சடலத்துடன் ஈஸ்வரம்மா வீட்டுக்கு திரும்பினார்.

ஆனால், டெங்கு காய்ச்சலால் இறந்த சுரேஷின் உடலை வீட்டுக்குள் கொண்டுவர கூடாது என வீட்டு உரிமையாளர் ஜகதீஷ் குப்தா மறுத்துவிட்டார். இதனால் வீட்டில் உள்ள மற்றவர்களுக்கு நோய்க் கிருமிகள் தொற்றும் எனக்கூறிய அவர் தயவு தாட்சண்யமின்றி கதவை சாத்திவிட்டார்.



இதைதொடர்ந்து ஈஸ்வரம்மாவுக்கு என்ன செய்வதென புரியவில்லை. உறவினர்களும் அவருக்கு கைகொடுக்கவில்லை. இதனால் கொட்டும் மழையில் இரவு முழுவதும் மகன் சடலத்துடன் சாலையில் அமர்ந்திருக்கும் நிலை ஏற்பட்டது.

காலையில் அந்த பகுதியில் வாக்கிங் சென்றவர்கள், ஈஸ்வரம்மாவின் நிலையை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவரிடம் விசாரித்தனர். அதன்பின்னர், அப்பகுதியை சேர்ந்த சிலர் தங்களிடம் இருந்த பணத்தை கொண்டு சுரேஷின் இறுதி சடங்கை செய்து முடித்தனர்.

டெங்கு காய்ச்சலால் இறந்த சிறுவனின் சடலத்தை வீட்டுக்குள் அனுமதிக்காத உரிமையாளருக்கு அப்பகுதியினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
Tags:    

Similar News