செய்திகள்

ரூ.20 லட்சம் வரையிலான பணி கொடைக்கு வரி விலக்கு: மத்திய அரசு அறிவிப்பு

Published On 2017-09-13 07:32 GMT   |   Update On 2017-09-13 07:32 GMT
பொதுத்துறை மற்றும் தனியார் துறையில் வழங்கப்படும் பணிக்கொடை தொகையில் ரூ.20 லட்சம் வரையிலான தொகைக்கு வரி விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது,
புதுடெல்லி:

பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, அந்நிறுவனத்தின் உரிமையாளர் பணிக்கொடை வழங்குவது வழக்கத்தில் உள்ளது.

தொழிலாளர்களின் சேவைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த பணிக்கொடை வழங்கப்படுகிறது.

பணிக்கொடையின் தொகையை நிர்ணயம் செய்து வழங்குவது அந்தந்த நிறுவன உரிமையாளரின் தனிப்பட்ட விருப்பமாகும். இப்படி வழங்கப்படும் பணிக் கொடையில் ரூ.10 லட்சம் வரையிலான தொகைக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது.

இந்த வரி விலக்கு உச்ச வரம்பை அதிகரிக்க வேண்டும் என்று கடந்த சில ஆண்டுகளாக வற்புறுத்தப்பட்டு வந்தது. இதையடுத்து இதற்கான சட்ட திருத்தத்தை மத்திய அரசு கடந்த மார்ச் மாதம் மேற்கொண்டது.

இந்த சட்ட திருத்தத்தின்படி பொதுத்துறை மற்றும் தனியார் துறையில் வழங்கப்படும் பணிக்கொடை தொகையில் ரூ.20 லட்சம் வரையிலான தொகைக்கு வரி விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சட்ட திருத்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. தொழிலாளர்களின் நலனை மனதில் வைத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
Tags:    

Similar News