செய்திகள்

அரியானா: பள்ளி மாணவன் கொல்லப்பட்ட விவகாரம் - மத்திய, மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்

Published On 2017-09-11 09:36 GMT   |   Update On 2017-09-11 09:36 GMT
அரியானா மாநிலம் குருகிராம் அருகே பள்ளியில் மாணவன் கொலை செய்யப்பட்ட விவாகரம் தொடர்பாக மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை மற்றும் மாநில அரசு விளக்கமளிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சண்டிகர்:

அரியானா மாநிலத்தில் உள்ள குருகிராமில் தனியார் பள்ளி ஒன்றில் 2-ம் வகுப்பு படித்து வந்த 7 வயது மாணவன் ஒருவன், பள்ளி கழிவறையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தான். விசாரணையில், அந்த சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்து கொலை செய்த பள்ளி பேருந்தின் நடத்துனர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதற்கிடையே, மாணவன் கொலை வழக்கில் சி.பி.ஐ. விசாரணை செய்து உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டும் என மாணவனின் பெற்றோர், உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டக்காரர்களை கலைக்கும் நோக்கில் போலீசார் நடத்திய தாக்குதலில் செய்தியாளர் ஒருவர் படுகாயம் அடைந்தார். செய்தி நிறுவனத்தின் வாகன கண்ணாடிகளை போலீசார் அடித்து நொறுக்கினர். இந்த தாக்குதலுக்கு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், கொலையான சிறுவனின் தந்தை தனது மகன் மரணம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணை வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு குறித்து கேள்வியெழுப்பிய நீதிபதிகள் மாணவன் மரணம் தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் மற்றும் மாநில அரசு ஆகியவை 3 வாரங்களில் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதற்கிடையே, சம்பவம் நடந்த பள்ளியின் நிர்வாகிகள் சோஹ்னா மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகி மாணவன் மரணம் குறித்து விளக்கமளித்துள்ளனர்.

இதனையடுத்து, அப்பள்ளியின் நிர்வாகிகளை இரண்டு நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
Tags:    

Similar News