செய்திகள்

விமானப் பணியாளர்களிடம் முரட்டுத்தனம்: 3 மாதம் முதல் ஆயுள்வரை பறக்க தடை

Published On 2017-09-08 10:03 GMT   |   Update On 2017-09-08 10:03 GMT
விமானப் பணியாளர்களிடம் முரட்டுத்தனமாக நடந்துகொள்ளும் பயணிகளுக்கு 3 மாதம் முதல் ஆயுள்வரை ஏர் இந்தியா விமானங்களில் பறக்க தடை விதிக்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது.
புதுடெல்லி:

ஏர் இந்தியா விமான பணியாளரை சிவசேனா எம்.பி. ரவிந்திரா கெய்க்வாட் சமீபத்தில் செருப்பால் அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, அவர் விமானத்தில் பயணிக்க தடை விதிக்கப்பட்டது. பின்னர், அந்த தடை விலக்கிக் கொள்ளப்பட்டது.

இந்நிலையில், விமானப் பணியாளர்களிடம் முரட்டுத்தனமாக நடந்துகொள்ளும் பயணிகள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக மத்திய அரசு இன்று ஒரு புதிய முடிவை அறிவித்துள்ளது.


விமானப் பணியாளர்களிடம் முரட்டுத்தனமாக நடந்துகொள்ளும் பயணிகள் தொடர்பாக விமானி புகார் அளித்த பின்னர் 30 நாட்களுக்குள் புகார் அளிக்கப்பட்ட நபர்மீது ஏர் இந்தியா அதிகாரிகள் குழு விசாரணை நடத்த வேண்டும். அப்போது, கண்டறியப்படும் குற்றத்துக்கு தகுந்தவாறு அவர் விமானத்தில் பறக்க தடை விதிக்கப்படும்.

இதில், முதல்கட்டமாக விமானப் பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுபவர்களுக்கு மூன்று மாதம் தடை விதிக்கப்படும். இரண்டாவது கட்டமாக தள்ளுமுள்ளு மற்றும் கைகலப்பில் ஈடுபட்டால் ஆறு மாதங்கள்வரை தடை விதிக்கப்படும். மூன்றாவது கட்டமாக உயிருக்கு தீங்கிழைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு குற்றங்களுக்கேற்ப இரண்டாண்டுகள் முதல் ஆயுட்காலம் வரை ஏர் இந்தியா விமானங்களில் பறக்க தடை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News