செய்திகள்

உ.பி.: புளூ வேல் உயிராட்டத்துக்கு மேலும் ஒரு மாணவன் பலி

Published On 2017-09-08 07:41 GMT   |   Update On 2017-09-08 07:41 GMT
உயிர்கொல்லி விளையாட்டான புளூ வேல் பந்தயத்துக்கு உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த 14 வயது மாணவன் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோ:

தற்கொலை விளையாட்டு என்ற பெயர் பெற்றுள்ள புளூ வேல் (நீல திமிங்கலம்) எனும் ஆன்லைன் கேம், விளையாடுபவருக்கு தினசரி ஒரு பணி என மொத்தம் 50 நாட்கள் வழங்கப்படும். இதன் இறுதி பணி கேமினை விளையாடுவோரை தற்கொலை செய்ய வைக்கிறது. ஒவ்வொரு நாளும் சவாலை முடித்ததும் கேமினை விளையாடுபவர் புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இணையத்தில் இதுபோன்ற ஆபத்தான கேம்கள் சமூக வலைத்தள உதவியின்றி விளையாட முடியாத நிலை ஏற்படுத்தப்பட்டு இருப்பதால் பலரும் இந்த கேம் விளையாட துவங்கி, இறுதியில் தற்கொலை செய்து கொள்ளும் அவலம் ஏற்படுகிறது.

2015- 2016 ஆண்டுகளுக்கு இடையில் மட்டும் புளூ வேல் விளையாடி 133 பேர் இறந்துள்ளதாக கூறப்படும் நிலையில், சமீபகாலமாக இந்தியாவிலும் புளூ வேல் இளம் உயிர்களை பறித்து வருகிறது.

புளூ வேல் ஆபத்தை உணர்ந்து இந்தியாவில் இந்த விளையாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. புளூ வேல் விளையாட்டுக்கு அழைத்து செல்லும் அனைத்து ‘ஆப்ஸ்’களையும் தடை செய்யுமாறு தொலைத்தொடர்பு நிறுவனங்களை இந்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை உத்தரவிட்டுள்ளது.

எனினும், புளூ வேல் மோகம் நமது மாணவர்கள் மற்றும் இளைய சமுதாயத்தினரிடையே தீராத தாகத்தையும் மோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்திய அரசால் தடை செய்யப்பட்டிருந்தாலும் இந்த ஆன்லைன் விளையாட்டு இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பிற ஆப்களின் மூலம் ரகசியமாக விளையாடப்பட்டு வருவதாக தெரிகிறது.

புளூ வேல் விளையாட்டு மோகத்தால் மும்பையில் 14 வயது சிறுவன் ஏழாவது மாடியில் இருந்து கீழே குதித்து உயிரிழந்தான். மேற்கு வங்காளம் மாநிலத்தை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவன் தனது வீட்டு பாத்ரூமுக்குள் தற்கொலை செய்துகொண்டு பலியானான்.


கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் ஆஷிக்(20) தனது படுக்கை அறைக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். புதுச்சேரி, மதுரை என புளூ வேல் மரணங்கள் வேகமாக பரவி வருகிறது.

இந்நிலையில், புளூ வேல் எனப்படும் விபரீத விளையாட்டால் தொடர்ந்து பல உயிர்கள் பலியாகிவரும் நிலையில் இதுதொடர்பாக தீவிரமாக கண்காணிக்குமாறும் புளூவேல் எனப்படும் இந்த மரண விளையாட்டை நிர்வகித்து வருபவர்கள் பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இதை பரப்பாமல் கண்காணித்து தடுக்குமாறும் அம்மாநில போலீஸ் டி.ஜி.பி. சுல்கான் சிங் உத்தரவிட்டுள்ளார்.

இருப்பினும், மரண பந்தயமான புளூ வேல் விளையாட்டு பரவுவதை கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

இதற்கிடையில், உத்தரப்பிரதேசம் மாநிலம், லக்னோ பகுதியில் உள்ள இந்திரா நகர் பகுதியில் வசித்துவந்த ஆதித்யா வர்தன் என்ற 14 வயது மாணவன் தற்போது புளூ வேல் விளையாட்டுக்கு பலியாகியுள்ளான்.

கடந்த இருவாரங்களாக தனது மொபைல் போனில் புளூ வேல் விளையாடிவந்த ஆதித்யா, நேற்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவனது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News