செய்திகள்

கவுரி லங்கேஷ் கொலை: சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரை செய்ய மாநில அரசுக்கு மத்திய மந்திரி வலியுறுத்தல்

Published On 2017-09-06 06:49 GMT   |   Update On 2017-09-06 06:49 GMT
மூத்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை விவகாரம் தொடர்பாக, கர்நாடக அரசு சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என மத்திய மந்திரி சதானந்த கவுடா வலியுறுத்தியுள்ளார்.
பெங்களூர்:

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ராஜேஷ்வரி நகரில் வசித்து வந்தவர் கவுரி லங்கேஷ் (55). பிரபல நாளிதழ்களில் பணியாற்றி உள்ளார். இவர் தற்போது வாரப்பத்திரிக்கை ஒன்றையும் நடத்தி வருகிறார். துணிச்சல் மிக்க பத்திரிகையாளரான இவர் மதவாதத்திற்கு எதிராக தொடர்ந்து எழுதி வந்துள்ளார்.

இதற்கிடையே, நேற்று மாலை தனது இல்லத்தில் கவுரி லங்கேஷ் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார். அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கவுரியின் மரணத்திற்கு கேரளா முதல்வர் பினராயி விஜயன் மற்றும் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர.

இந்நிலையில், கவுரி லங்கேஷ் கொலை விவகாரம் தொடர்பாக, கர்நாடக அரசு சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என மத்திய மந்திரி சதானந்த கவுடா வலியுறுத்தியுள்ளார்.



இதேபோல், கவுரி லங்கேஷ் சகோதரர் இந்திரஜித் லங்கேஷும் சி.பி.ஐ. விசாரணை கோரியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், கொலையாளிகளை விரைந்து கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் கொல்லப்பட்ட எழுத்தாளர் கல்புர்கி கொலை வழக்கு சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக அந்த வழக்கில் இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளார்.

மேலும், கவுரி லங்கேஷ் கொலைக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்து பெங்களூர் மட்டுமின்றி நாடு முழுவதும் இன்று காலை முதல் பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக செயல்பாட்டாளர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
Tags:    

Similar News