செய்திகள்

உ.பி. சட்டசபையில் வெடிமருந்து எடுத்த விவகாரம்: தவறான அறிக்கை அளித்த தடயவியல் இயக்குனர் சஸ்பெண்ட்

Published On 2017-09-04 13:09 GMT   |   Update On 2017-09-04 13:09 GMT
உத்தரப்பிரதேசம் மாநில சட்டசபையில் வெடிமருந்து எடுத்த விவகாரம் தொடர்பாக, தவறான அறிக்கை அளித்த தடயவியல் இயக்குனர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் முதல்-மந்திரியாக பொறுப்பேற்ற யோகி ஆதித்யாநாத், தனது அமைச்சரவையின் முதல் பட்ஜெட்டை கடந்த ஜூலை மாதத்தில் தாக்கல் செய்தார்.

முன்னதாக சட்டசபையில் பாதுகாவலர்கள் சோதனை நடத்தியபோது, எதிர்க்கட்சி தலைவர் ராம்கோவிந்த் சவுத்ரி இருக்கை அருகில் வெள்ளை நிற பவுடர் கொண்ட ஒரு பிளாஸ்டிக் கவர் காணப்பட்டது. அதனை கைப்பற்றிய பாதுகாப்பு அதிகாரிகள் தடயவியல் துறைக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் வெடிகுண்டுகளை தயாரிக்க பயன்படும் மிக ஆபத்தான மூலப்பொருள் என
அறிக்கை அளித்தனர்.

இதுதொடர்பாக, முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் சட்டசபையில் வெடிமருந்து கண்டெடுக்கப்பட்டது தொடர்பாக ஆராயும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.



இந்நிலையில், உ.பி. மாநில உள்துறை முதன்மை செயலாளர் அரவிந்த் குமார் கூறுகையில், சட்டசபையில் கண்டெடுக்கப்பட்டது வெடிமருந்து என தவறான அறிக்கை அளித்த தடயவியல் துறை இயக்குனர் ஷிவ் பிஹாரி உபாத்யாய சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், சட்டசபையில் கண்டெடுக்கப்பட்டது வெடிமருந்து என தடயவியல் துறை இயக்குனர் அறிக்கை அளித்துள்ளார். ஆனால், தேசிய புலனாய்வு முகமை அந்த பொருளை மத்திய தடயவியல் துறையிடம் சோதனைக்காக அளித்தது. சந்தேகப்படும் வகையில் கிடைத்த பொருள் வெடிமருந்து அல்ல, சிலிகான் ஆக்சைட் தான் என ஆய்வு முடிவுகள்
தெரிவித்துள்ளன. இதையடுத்து, தவறான அறிக்கை அளித்த தடயவியல் துறை இயக்குனர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News