செய்திகள்

ஊழல் நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதல் இடம் - ‘போர்ப்ஸ்’ பத்திரிகை வெளியிட்டது

Published On 2017-09-02 00:57 GMT   |   Update On 2017-09-02 00:57 GMT
ஊழல் நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்குத்தான் முதல் இடம் கிடைத்துள்ளதாக அமெரிக்காவின் ‘போர்ப்ஸ்’ பத்திரிகை வெளியிட்டுள்ளது.
புதுடெல்லி:

‘டிரான்ஸ்பேரன்சி இன்டர்நேஷனல் (டி.ஐ.)’ என்ற அமைப்பு, 16 ஆசிய பசிபிக் நாடுகளில் ஊழல் நிலவரம் குறித்து 18 மாதங்கள் ஆய்வு நடத்தியது.

இந்த ஆய்வின்போது அந்த அமைப்பு 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களிடம் கருத்து கேட்டு, ஊழல் நாடுகளின் பட்டியலை தர வரிசைப்படுத்தி உள்ளது. இந்தப் பட்டியலை அமெரிக்காவின் ‘போர்ப்ஸ்’ பத்திரிகை வெளியிட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் இந்தியாவுக்குத்தான் முதல் இடம் கிடைத்துள்ளது. இந்தியாவில் லஞ்ச விகிதாச்சார அளவு 69 சதவீதம்.

இந்தியாவை தொடர்ந்து ஊழலில் அணிவகுத்து நிற்கும் நாடுகள் பட்டியலில் வியட்நாம், தாய்லாந்து, பாகிஸ்தான், மியான்மர் ஆகியவை இடம் பிடித்துள்ளன.

இந்தியாவில் பள்ளிக்கூடங்கள், ஆஸ்பத்திரிகள், அடையாள ஆவணங்கள், போலீஸ் துறை, பயன்பாடு சேவைகள் துறை ஆகியவற்றில்தான் லஞ்சம் தலைவிரித்தாடுவதாக தெரியவந்துள்ளது.

‘டிரான்ஸ்பேரன்சி இன்டர்நேஷனல் (டி.ஐ.)’ அமைப்பிடம் கருத்து தெரிவித்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் லஞ்சம் கொடுத்தால் தான் காரியம் சாதிக்க முடிகிறது என தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் பிரதமர் மோடி, ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருவதாக 53 சதவீதம்பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு இந்த அமைப்பு நடத்திய உலகளாவிய ஊழல் சர்வே முடிவில் 168 நாடுகளில் இந்தியாவுக்கு 76-வது இடம் கிடைத்திருந்தது நினைவுகூரத்தக்கது. 
Tags:    

Similar News